சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், இன்றே மருத்துமனையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அட்மிட் ஆகி உள்ளார், இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சர்ச்சைக்கு பெயர்போன முன்னாள் அதிமுக அமைச்சரான செந்தில்பாலாஜி, வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் 2013ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அவரது புகார் மனுவில், ராஜேந்திர பாலாஜி 7 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் 3வது நீதிபதியின் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் விசாரணை தொடங்கியது. இந்த நிலையில், 3வது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டதை எதிர்த்தும் வழக்கு விசாரணைக்கு தடைகோரியும் ராஜேந்திர பாலாஜி கடந்த மாதம் 19ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுமீதான விசாரணை நாளை உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் மற்றும் நீதிபதி பி.ஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வர உள்ளது. இதனிடையெ இவ்வழக்கில் தமிழ்நாடு அரசும் செப்டம்பர் 3ம் தேதி கேவிட் மனு அளித்துள்ளது.
இந்த நிலையில், முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி, சென்னை அமைந்தகரை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.