டில்லி
திருத்தப்பட்ட குடியுரிமை சட்ட விதிகளின் கீழ் குடியுரிமை பெற மத சான்றிதழ் அவசியம் எனக் கூறப்படுகிறது.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தின் படி 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மற்றும் வங்க தேசத்தில் இருந்து குடியேறியவர்களில் இந்துக்கள், சீக்கியர்கள், கிறித்துவர்கள், பார்சிகள், சமணர்கள் மற்றும் புத்த மதத்தினருக்குக் குடியுரிமை வழங்க உள்ளது. இந்த சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இந்த சட்டம் கடந்த 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட போதிலும் இதற்கான விதி முறைகள் இன்னும் சரிவர் அறிவிக்கப்படவில்லை. இந்த சட்டத்தின் வரைவு விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கி உள்ளது. அதன்படி இந்த சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற விண்ணப்பிக்க சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சட்டப்படி குடியுரிமை கோருபவர்கள் தங்களது மதச் சான்றிதழை அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர், “இந்த சட்டத்தின் கீழ் குடியுரிமை கோருபவர்கள் தங்களது மதச் சான்றிதழாக இந்திய அரசால் அளிக்கப்பட்டுள்ள ஏதாவது சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
உதாரணமாக ஒருவர் தனது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்திருந்தால் அந்த சான்றிதழில் உள்ள மத விவரங்களை அளிக்கலாம். அத்துடன் 2014 ஆம் வருடம் டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்பு ஆதார் அட்டை பெற்றிருந்தால் அதையும் அளிக்கலாம். அது மட்டுமின்றி 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன் அளிக்கப்பட்டுள்ள வேறு இந்திய அரசின் சான்றிதழ்களில் ஏதாவது ஒன்றையும் அளிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.