அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனா மீதான பரஸ்பர வரியை உயர்த்திய கையோடு அதை 90 நாட்களுக்கு செயல்படுத்தப் போவதில்லை என்றும் அறிவித்திருந்தார்.
சீனாவுக்காக அமெரிக்க சந்தையை திறந்து விடுவது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகளிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் அப்படி செய்யாவிட்டால் நம்மால் எதுவும் முடியாது என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த வாரம் சீன அதிபர் ஜி ஜிங்பிங் உடன் தொலைபேசியில் உரையாடிய டொனால்ட் டிரம்ப் இருநாட்டு வர்த்தகம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனைகளைத் தீர்க்க முன்வந்தார்.

இதையடுத்து அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் உடன் சீன துணைப் பிரதமர் ஹீ லைஃபெங் தலைமையிலான குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
இந்தக் குழுவில் சீனாவின் வர்த்தக அமைச்சர் லி மற்றும் வாங் வென்டாவோ ஆகியோர் இருந்தனர். இந்தப் பேச்சுவார்த்தை பிரிட்டனில் நடைபெற்றதாகவும் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகிலுள்ள 200 ஆண்டுகள் பழமையான மாளிகையான லான்காஸ்டர் ஹவுஸில் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் தற்போது இதுகுறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை எங்கு எப்போதும் நடைபெறும் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.
அதேவேளையில், பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்திவைப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை 30 நாட்கள் ஓடிவிட்டதாகக் கூறப்படும் நிலையில், இருநாடுகளுக்கும் இடையிலான இந்த வர்த்தக மோதல் விரைவில் தீர்வுகாணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.