கர்னூல்:
கல்லூரி பேராசிரியர் மற்றும் சீனியர் மாணவர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததால், மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டது ஆந்திர மாநிலத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள நன்ட்யால் எனும் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்படுகிறது. இங்கு பி.உஷா ராணி எனும் மாணவி பொறியியல் முதலாமாண்டு படித்து வந்தார்.
தீபாவளி விடுமுறைக்கு கடப்பா மாவட்டத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்த மாணவி உஷா ராணி தீபாவளி பண்டிகை முடிந்து கல்லூரிக்கு திரும்பினார்.
ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் வீட்டிற்கு திரும்பியவர், பூச்சி மருந்தை குடித்துவிட்டார்.
கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த உஷா ராணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தற்போது பல அதிர்ச்சகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன. கல்லூரி வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி படித்து வந்த உஷாராணியை சீனியர் மாணவர்கள் பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்துள்ளனர். உஷா ராணி உடை மாற்றும் போது மறைந்து நின்று புகைப்படம் எடுத்த அவர்கள், அதை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியிருக்கிறார்கள்.
தவிர தன்னை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி உஷா ராணியை தொல்லை செய்து வந்திருக்கிறார் ஒரு பேராசிரியர். அதற்கு உஷாராணி மறுத்திருக்கிறார். இதையடுத்து உஷாராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சீனியர் மாணவர்களுக்கு அந்த பேராசிரியர் ஆதரவாக இருந்திருக்கிறார்.
அந்த பேராசிரியர் மற்றும் சீனியர் மாணவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உஷாராணியின் குடும்பத்தினர் வலியுறுத்தி வருகிறார்கள்.