சென்னை:

சினிமா தியேட்டர்களுக்கு டிஜிட்டல் சேவை அளிப்பவர்களுக்கு எதிராக தியேட்டர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் ஆதரவு தெரிவித்தது. இந்நிலையில் பேச்சுவார்த்தையில் சமூக முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து நாளை முதல் சினிமா தியேட்டர்கள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போராட்ட காலத்தில் நடிகர் விஜய் பட சூட்டிங் சென்னை விக்டோரியா இல்லத்தில் நடந்தது. பெயர் சூட்டப்படாத இந்த திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். வேலைநிறுத்த போராட்ட காலத்தில் குறிப்பிட்ட சில நடிகர்களின் படத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொ டுத்து சூட்டிங் நடத்த அனுமதித்ததாக தயாரிப்பாளர் சங்கத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தயாரிப்பாளர் சதீஸ்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘விஜய் பட சூட்டிங் விக்டோரியா இல்லத்தில் நடக்கிறது. இதன் மூலம் நமது ஒற்றுமை என்ன ஆனது?. எப்படி சங்கம் இதற்கு சிறப்பு அனுமதி வழங்கலாம்?. இந்த முடிவை நான் எதிர்க்கிறேன். லட்சகணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி இருக்கும் நிலையில் சிலரை மட்டும் சூட்டிங் நடத்த அனுமதித்தது நியாயமற்ற செயல். விஜய் போன்ற நடிகர்கள் இதை ஊக்குவிக்க கூடாது’’ என்று தெரிவித்துள்ளார். இது போல் மேலும் பல தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சிறப்பு அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படும் தகவலை மறுத்த தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கூறுகையில், ‘‘4 நிறுவனங்கள் சூட்டிங் நடத்த அனுமதி கோரின. முதலில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அனுமதி வழங்கப்பட்டது.

திட்டமிட்ட சூட்டிங்கை ரத்து செய்தால் அதிப்படியான நஷ்டம் ஏற்படும் என்பதால் பரிசீலனை செய்யப்பட்டது. விஜய் பட விவகாரத்தில் ஐதராபாத்தில் இருந்து சண்டை கலைஞர்களை வரவழைத்துவிட்டனர். அடுத்த 3 மாதங்களுக்கு இவர்கள் கிடைக்கமாட்டார்கள். அதனால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது’’ என்றார்.