சேலம்,
அடுத்த மாதம் நடைபெற இருக்கும் புரோ கபடி போட்டியில் சேலம் வீரர் செல்வமணி ரூ.73 லட்சம் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த செல்வமணி என்ற கபடி வீரரை ஜெய்ப்பூர் பாந்தர்ஸ் அணி ரூ.73 லட்சத்துக்கு விலைபேசி வளைத்து போட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 2014ம் ஆண்டு முதல் புரோ கபடி லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை இந்த புரோ கபடி லீ்க் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. புரோ கபடி போட்டிக்கு இந்திய ரசிகர்களிடையே பெருத்த ஆதரவு நிலவி வருகிறது.
தற்போது புரோ கபடியில் 8 அணிகள் விளையாடி வரும் நிலையில் இந்த ஆண்டு முதல் தமிழ்நாடு, குஜராத், அரியானா, உத்தர பிரதேசம் உள்பட 4 அணிகள் புதிதாக இடம் பெற்றுள்ளன.
இந்த ஆண்டின் 5-வது புரோ கபடி லீக் போட்டி ஜூலை 5-ந்தேதி தொடங்கி அக்டோபர் வரை நடைபெறுகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்கும். மொத்தம் 130 ஆட்டங்கள் நடைபெறுகிறது.
புரோ கபடி லீக் போட்டியில் தமிழக அணி இடம் பெற்றுள்ளதால் சென்னையில் இந்த போட்டி நடைபெற அதிகமான வாய்ப்பு இருக்கிறது.
இந்த கபடி போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீரர் செல்வமணி ஜெய்ப்பூர் அணிக்காக களம் இறங்குகிறார்.
சேலம் ஓமலூர் பகுதியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேக்கம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி. பாலிடெக்னிக் வரை படித்துள்ள இவர் ராணுவத்தில் தவில்தாரராக இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்து வந்தார்.
ஆனால், கபடியின்மீது உள்ள மோகத்தின் காரணமாக வேலையை விட்டுவிட்டு மீண்டும் கபடி போட்டியில் களமிறங்கினார். சிறுவயதிலிருந்தே கபடியின் மீதான ஆர்வம் காரணமாக பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ள இவர், கல்லூரியில் படிக்கும்போது தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்தில் உறுப்பினரானார்.
இவரது விளையாட்டு திறமை காரணமாக 2014-ம் ஆண்டு தமிழக அணிக்காக தேர்வானார். அதையடுத்து அவருக்கு தென்னக ரெயில்வேயில் அவருக்கு கிளார்க் பணி கிடைத்தது.
பணியில் சேர்ந்தபடி தமிழக அணிக்காக கபடி போட்டிகளில் பங்கேற்று வந்தவருக்கு திடீரென புரோ கபடி லீக் தொடரின் விளையாடி அதிர்ஷ்டம் கிடைத்து.
இவரது அதிவேக அதிரடி ரெய்டை பார்த்து வியந்த புரோ கபடி லீக் தொடரின் டில்லி அணி பயிற்சியாளர் பொன்னப்பா செல்வமணியை டில்லி அணிக்காக ஏலம் எடுத்தார். இரண்டு ஆண்டுகளாக டில்லி அணிக்காக ஆடி வந்த செல்வமணியை இந்த ஆண்டு ஜெய்ப்பூர் அணி 73 லட்சத்துக்கு எடுத்து அசத்தி உள்ளது.
செல்வமணி இதுவரை 3 சீசன்களில் 31 ஆட்டங்களில் பங்கேற்று 222 முறை ரெய்டு சென்றுள்ளார். இவற்றில் 72 ரெய்கள் வெற்றிகரமாக அமைந்துள்ளன.
இதன் பலனாக அடுத்த மாதம் நடை பெற உள்ள புரோ கபடி லீக் தொடரின் 5-வது சீசனுக்காக செல்வமணியை ரூ.73 லட்சத்துக்கு ஏலம் எடுத்து ஜெய்ப்பூர் பாந்தர்ஸ் அணி வளைத்துள்ளது.
ஏற்கனவே பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த மாரியப்பனும் இதே பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.