சென்னை:
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தை கூட்டி. பிரியங்கா காந்தியை உடனடியாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வலியுறுத்தி உள்ளார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, கட்சித்தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து, வேறு தலைவர்கள் யாரும் நியமனம் செய்யாத நிலையில், பிரியங்கா காந்தியை தலைவராக ஒரு தரப்பினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது, உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதி பொறுப்பாளராக உள்ள பிரியங்கா காந்தியை, கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று ராகுல்காந்தி உள்பட அவரது குடும்பத்தினர் தடுத்து வருகின்றனர்.
ஆனால், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில், பிரியங்கா காந்தியை கட்சியின் தலைவராக்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது, காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக இயற்கையிலேயே தகுதி உள்ளவர் ராகுல் காந்தி மட்டுமே.ஆனால், அவர் பதவியில் நீடிக்க முடியாது என்று கூறிவிட்டார்.
இதை பாஜக தனக்கு சாதகமாக்கி வருகிறது. எதிர்க்கட்சியே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. ஜனநாயகத்தை வலுப்படுத்த வலுவான எதிர்க்கட்சி அவசியம். எனவே காங்கிரஸ் கட்சிக்கு போர்க்குணம் கொண்ட தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறினார்.
புதிதாக தேர்வு செய்யப்படும் தலைவர், மிரட்டலுக்கு பயப்படாதவராகவும், மக்கள் செல்வாக்கு மிகுந்தவராகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் பார்த்தால் இப்போதைய சூழலில் பிரியங்கா காந்தி மட்டுமே காங்கிரஸ் தலைவராக முழு தகுதி படைத்தவர். எனவே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டி பிரியங்காவை உடனடியாக தலைவராக தேர்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.
பிரியங்கா காந்தி ஏற்கனவே, கடந்த மே மாதம் தனது டிவிட்டர் பக்கத்தில், நானும் ராகுலும் வன்முறைக்கும் பல இழப்புகளுக்கும் நடுவிலே வளர்ந்தோம். என்றும், தற்போது தனது குழந்தைகள் வளர்ந்துவிட்ட சூழலில், நான் அரசியலில் இருப்பதை என் குழந்தைகள் விரும்புகிறார்கள் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.