டில்லி
மக்களவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி 100 க்கும் மேற்பட்ட பேரணிகளில் கலந்துக் கொள்கிறார்.
காங்கிரஸ் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரயங்கா காந்தி உத்திரப் பிரதேச மாநில கிழக்குபகுதியின் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளர். அவர் அந்த மாநிலத்தில் பல பேரணிகளையும் பிரசாரக் கூட்டங்களையும் நடத்தி உள்ளார். அவருடைய வருகை உத்திரப் பிரதேச வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியதால் உ பி மாநிலத்தில் காங்கிரஸ் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
உத்திரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் சுற்றுப்பயணம் செய்துக் கொண்டிருந்த பிரியங்கா காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்த போது உடன் சென்றார். அப்போது மக்களிடையே அவருக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே பல மாநிலங்களில் இருந்தும் தேர்தல் பிரசாரம் செய்ய காங்கிரஸார் பிரியங்காவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதை ஒட்டி அகில இந்திய காங்கிரஸ் கட்சி பிரியங்காவின் பயணத் திட்டம் ஒன்றை அமைக்க உள்ளது. இந்த பயணத்தில் நாடெங்கும் சுமார் 100க்கும் மேற்பட்ட தேர்தல் பேரணிகளில் கலந்துக் கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக அவர் கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கும் பேரணிகளில் கலந்துக் கொள்வார் என கூறப்படுகிறது.
இது குறித்து மூத்த தலைவர்களில் ஒருவர், “பிரியங்காவுக்கு நாடெங்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதனால் நாடெங்கும் உள்ள அனைத்து மாநிலங்களின் பேரணிகளில் கலந்துக் கொள்ள காங்கிரசார் அவருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அவரால் அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியாது என்பதால் காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ள பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த பயணத்தில் அவர் பெண்களுடனும் மாணவர்களுடனும் கலந்துரையாடலில் பங்கு பெற உள்ளார்” என தெரிவித்தார்.