அகமது படேல் இடத்தை நிரப்பிய பிரியங்கா..
கடந்த ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடந்த போது, கட்சி தலைமைக்கு எதிராக மூத்த தலைவர்கள் 23 பேர் பகிரங்க கடிதம் எழுதினர்.
இதனால் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
‘’ஜி-23’’ என்று இந்த அதிருப்தி தலைவர்கள் அழைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த அதிருப்தி தலைவர்கள் சிலரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த சனிக்கிழமை அன்று முதன் முறையாக சந்தித்து பேசினார்.
இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்த சந்திப்பு ஆக்கபூர்வமாக இருந்ததாக அதிருப்தி தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
காங்கிரஸ் கட்சியில் நெருக்கடி ஏற்படும் போது சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல், இதற்கு தீர்வு காண்பார்.
அண்மையில், அகமது படேல் மறைந்த நிலையில், அவரது ஸ்தானத்தில் இருந்து பிரியங்கா காந்தி செயல் பட்டதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதமே பிரியங்கா இந்த அதிருப்தி தலைவர்களை தொலைபேசியில், தொடர்பு கொண்டு பேசி, அவர்களுக்கும் கட்சி தலைமைக்கும் இடையே பாலமாக இருந்து ஒருங்கிணைத்துள்ளார்.
பிரியங்காவின் தீவிர முயற்சியின் விளைவாகவே, சனிக்கிழமை அன்று இந்த தலைவர்கள் சோனியாவை சந்தித்து நீண்ட நாட்களுக்கு பிறகு மனம் விட்டு பேசியுள்ளனர்.
-பா.பாரதி.