சுனார்:

சோன்பத்ராவில் படுகொலை செய்யப்பட்டவர்கள் குடும்பத்தினரை  பிரியங்கா காந்தி சந்தித்துப் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

யோகி ஆதித்யநாத் தலைமையில் உத்தரபிரதேச மாநிலத்தில்  மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள சோன்பத்ரா கிராமத்தில், தாங்கள் பயிர் செய்து வந்த நிலத்தை பழங்குடி விவசாயிகள் விட்டுக் கொடுக்க மறுத்தனர். அவர்களை  ஆளும்கட்சி குண்டர்கள் துப்பாக்கியால் சுட்டு வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  28 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு, வாரணாசி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  இந்த சம்பவ்ம நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதையடுத்து, உ.பி. மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சோன்பத்ராவில் வன்முறை வெறியாட்டம் நடைபெற்ற  இடத்தை பார்வையிடவும், அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசவும் நேற்று வருகை தந்தார்.

வாரணாசி மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியவர், தொடர்ந்து சோன்பத்ரா செல்ல முயன்றார்.  ஆனால், அவர் சோன்பத்ரா செல்ல காவல்துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து, அவர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதன் காரணமாக காவல்துறையினர் அவரை கைது செய்து  சுனாரில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்க வைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்காமல் நான் திரும்ப மாட்டேன் என்று உறுதியாக தெரிவித்து உள்ள பிரியங்கா காந்தி இரவு முழுவதும் அங்கும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இதன் காரணமாக அவரை மாநில அரசு அங்கிருந்து வெளியேற அனுமதி மறுத்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள மிர்சாபூரில் உள்ள சுனார் கோட்டை யில் சோன்பத்ராவில் படுகொலை செய்யப்பட்டவர்கள் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து பேசினார். அவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்வதாகவும் உறுதி அளித்தார்.