டில்லி

ஸ்ரோ, அணு ஆய்வு மையம், செபி, உள்ளிட்ட பல துறைகளின் 3000க்கும் மேற்பட்ட  ஊழியர்களின் இ மெயில் கணக்குகளில் ஊடுருவல் நடந்துள்ளதாக ஒரு தனியார் ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கவுகாத்தி ஐஐடியில் கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியலில் பட்டப்படிப்பு படித்த சாய் கிருஷ்ணா கோத்தபள்ளி என்பவர் ஹாக்ரூ என்னும் ஆய்வு ஒன்றை நடத்தினார்.  அவர் பல முக்கிய இணைய தளங்களில் இருந்து  விவரங்கள் திருடுவது குறித்து ஆய்வு செய்தார்.    குறிப்பாக அரசு துறைகளில் பல முக்கிய விவரங்களைத் திருடு போவது குறித்தும் ஆய்வு நடத்தினார்.

அந்த ஆய்வில் அவர் ”நான் கண்காணிக்கப்படுகிறேனா?” என்னும் தனியார் இணைய தளத்தைப் பயன்படுத்தினார்.  இந்த ஆய்வில் பல அரசு அதிகாரிகளின் அதிகாரப் பூர்வ இ மெயில் கணக்குகளில் ஊடுருவல் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.  இ மெயில் கணக்குகளில் gov.in என முடியும் அரசு அதிகாரிகளில் 3202 கணக்குகளில் ஊடுருவல் நடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது.,

இது குறித்து சாய் கிருஷ்ணா கோத்தபள்ளி, “பல அதிகாரிகளின் இ மெயில் கணக்குகளின் பெயர் மற்றும் பாஸ்வர்ட் கண்டுபிடிக்கப்பட்டு ஊடுருவல் நடந்துள்ளது.   இது அதிர்ச்சியை அளிக்கும் விஷயமாகும்.  இவ்வளவு கணக்குகளில் ஊடுருவல் நடந்திருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாகப் பல முக்கிய அரசு அமைப்புகளின் அதிகாரிகளின் கணக்குகளில் ஊடுருவல் நடந்துள்ளது

இதில் இந்திரா காந்தி அணு ஆய்வு மைய ஊழியர்களின் 365 கணக்குகளும், பாபா அணு ஆராய்ச்சி மைய ஊழியர்களின் 325 கணக்குகளும், செபி ஊழியர்களின் 157 கணக்குகளும், குஜராத் மாநில அரசு ஊழியர்களின் 132 கணக்குகளும், இஸ்ரோ ஊழியர்களின் 111 கணக்குகளும் அடங்கும்.  குறிப்பாக அணு ஆய்வு மற்றும் விண்வெளி ஆய்வு அமைப்புக்களின் ஊழியர்கள் கணக்கில் ஊடுருவல் நடந்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சாய் கிருஷ்ணாவின் ஆய்வுப்படி பெரும்பாலான அதாவது 85%  மெயில் கணக்குகளின் பாஸ்வர்ட்கள் வெறும் வார்த்தைகளாக மட்டும் உள்ளன.   அதுவும் பலரது பாஸ்வர்ட்கள் அவர்களின் பெயர் அல்லது இ மெயில் லாகின் பெயர்களை ஒத்து இருந்துள்ளன.  இதனால் இத்தகைய பாஸ்வர்டுகளை ஊடுருவல் பேர்வழிகள் கண்டறிவது சுலபம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வு குறித்து சாய் கிருஷ்ணா அந்தந்த துறைகளுக்குத் தகவல்கள் அனுப்பி உள்ளதாகவும் ஆனால் அந்த துறையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.   மேலும் அவர் அரசு அமைப்புகள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களிலும் இதுபோல ஊடுருவல் நடந்திருக்கலாம் என அச்சை தெரிவிக்கிறார்.    மேலும் அவர் அரசு ஊழியர்கள் குறைந்த பட்சம் தங்கள்  பாஸ்வர்ட்களை மாற்றி அமைக்க அரசு உத்தரவிடுவதன் மூலம் எதிர்கால ஊடுருவல்களைத் தவிர்க்க முடியும் எனக் கூறி உள்ளார்.