வேலூர்: சிறை கைதியை வீட்டு வேலை செய்ய வைத்து சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பான புகாரில், இதுகுறித்த சிபிசிஐடி போலீஸார் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி வீட்டில், சிறைக்கைதி சிவகுமார் என்வரை வீட்டுக்கு வேலைக்காக பணி அமர்த்தி உள்ளார். அவர் நகைகளை திருடிவிட்டதாக கூறி, சக சிறைதுறை அதிகாரிகளை வைத்து அவரை சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரை அடுத்து சிபிசிஐடி போலீசார் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை சேர்ந்த சிவகுமார், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்த சிறையில் டிஐஜியாக இருந்த ராஜலக்ஷ்மி, வீட்டிற்கு வேலை செய்வதற்காக சிவக்குமார் அழைத்துச் சென்று வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளார். இந்த காலக்கட்டத்தில், அவரது வீட்டில் இருந்து 4.25 லட்சம் பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போயுள்ளது. இந்த பொருட்கள் மற்றும் பணத்தை சிவகுமார்தான் திருடியிருப்பதாக ராஜலட்சுமி குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக சக அதிகாரிகளைக்கொண்டு விசாரணை நடத்தியதில், கைதி சிவகுமார் சிறை அதிகாரி ராஜலட்சுமி வீட்டில் திருடிய பணத்தை மண்ணில் புதைத்து வைத்திருந்ததாகவும், பின்னர் அந்த நகைகளை மீட்டதாகவும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தின்போது சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் சிறைக் காவலர்கள் கைதி சிவகுமாரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த சிவகுமாரின் தாய், தனது மகனை திருடியதாகக் கூறி அவரை சித்திரவதை செய்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுகுறித்து, வேலூர் தலைமை நீதித்துறை நடுவர் சிறைக்குச் சென்று நேரில் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்தது. அதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து அரசுக்கு வரும் 17ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
,இதைத்தொடர்ந்து, வேலூர் சரக டிஐஜி ராஜலக்ஷ்மி உள்பட 14 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இதனிடைய கைதி சிவகுமார் தற்போது சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்துவதற்காக இன்று காலை சிபிசிஐடி எஸ்.பி., வினோத் தலைமையில் 6 பேர் கொண்ட போலீஸ் டீம், சேலம் மத்திய சிறைக்கு சென்று கைது சிவக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து நாளை வேலூர் சிறையிலும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர்.