பெங்களூரு,
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா சிறைதுறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக குற்றம்சாட்டிய டிஜிபி ரூபா அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதுகுறித்து முன்னாள் முதல்வரும், கர்நாடக மதசார்பற்ற ஜனதாதளம் தலைவருமான குமாரசாமி கர்நாடகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சிறைத்துறை ஐ.ஜி சத்திய நாராயணாவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் நடைபெற்று வரும் பல்வேறு ஊழல்கள் குறித்து உயரதிகாரிகளுக்கு கடிதம் எழுதி பரபரப்பு ஏற்படுத்தி டிஐஜி ரூபா இடமாற்றப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து உயர்மட்டக் குழு விசாரணை நடைபெறும் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ள நிலையில், இன்று திடீரென பெங்களூர் சரக காவல்துறை உயர்அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இடமாற்றம் குறித்து, மதசார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், நேர்மையான அதிகாரியை இடமாற்றம் செய்வது ஜனநாயகத்துக்கு விரோதமானது. ஊழலுக்கு முதல்வர் சித்தராமையா துணை போவது வாடிக்கையாகிவிட்டது என்றும்,
டிஐஜி ரூபாவின் இடமாற்றத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் எங்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் பாஜகவும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், சிறை முறைகேடு குறித்து நடுநிலையாக விசாரணை நடைபெறவே ரூபா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை அதிகாரி வினய் குமார் விசாரணையில் உண்மை தெரியவரும் என்றார்.