டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணயின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மோடி,  3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்கிறார்.

மோடியின் பதவி ஏற்பு விழா குடியரசு தலைவர் மாளிகையில்  ஜூன் 9-ம் தேதி மாலை 6 மணிக்கு  நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப் பட்டு உள்ளது. இந்த பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க பல  வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

டெல்லியில் இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மோடி ஒருமனதாக நாடாளுமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவரக்கு பாஜக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக  பா.ஜ.க தலைவர் பிரகலாத் ஜோஷி செய்தியாளர்களை சந்தித்தபோது,  ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்பார் என்று அறிவித்தார். இந்த பதவி ஏற்பு விழாவில்,  பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளனர், இதில் 8,000 க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள் என கூறினார்.

மேலும்,  பதவியேற்பு விழா முடிந்து ஒரு நாள் கழித்து விருந்தினர்கள் தங்கள் நாடு திரும்புவார்கள் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.  “புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களும் தங்கள் மனைவி மற்றும் மூன்று விருந்தினர்களுடன் வருவார்கள் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு,  அனைத்து ஏஜென்சிகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்த, நிகழ்வுக்கு முன் ஒரு ஒத்திகையை ஏற்பாடு செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

18வது மக்களவைக்கான தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது.  தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டன. மக்களவைத் தேர்தல் 2024இன் முடிவுகள் வெளியான நிலையில், பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களிலும், மற்றவை 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் பாஜக 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. எனவே, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதனால் தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளது. எனவே, 240 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜக மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் (ஜூன் 5) டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மோடி தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு கடிதங்களை கூட்டணி கட்சி தலைவர்கள் வழங்கினர்.