டெல்லி:
பசு பக்தி என்ற பெயரில் மக்களை கொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு தடை விதித்துள்ளது. பாஜ ஆட்சி செய்யும் மாநிலங்களும் பசு வதைக்கு எதிராக கடுமையாக தண்டிக்கும் சட்டங்களை கொண்டு வந்து உள்ளது.
கடந்த 22-ம் தேதி அரியானா மாநிலத்தை சேர்ந்த சிறுவன் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி ரெயிலில் சக பயணிகளால் அடித்துக் கொல்லப்பட்டார். பசு பாதுகாவலர்கள் என தங்களை அழைத்து கொள்பவர்கள் இதுபோன்ற கொடூரமான தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
ஜார்க்கண்ட் மாநிலம் பாரியாபாத்தில் பால் பண்ணை உரிமையாளர் உஸ்மான் அன்சாரி பசு பாதுகாவலர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார். அவருடைய வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது. அவருடைய வீட்டிற்கு வெளியே இறந்த பசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த வன்முறை நேரிட்டது.
கடந்த 11-ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் கலப்பின பசுக்கள், கன்றுகளை வாங்கி வந்த தமிழக அதிகாரிகளையும் பசு காவலர்கள் தாக்கினர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் சமூகநல ஆர்வலர்கள் மத்தியில் ஆளும் பா.ஜனதா ஆர்.எஸ்.எஸ். கொள்கையை நாடு முழுவதும் மக்களிடம் திணிக்க முயற்சி செய்கிறது. இஸ்லாமியர்கள் மற்றும் தலித் பிரிவினர் இலக்காக்கப்படுகின்றனர் என கடுமையாக கண்டித்து வருகின்றன.
இந்நிலையில் பசு பக்தி என்ற பெயரில் மக்களை கொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், ‘‘நாட்டில் சென்று கொண்டிருக்கும் சில விவகாரங்கள் தொடர்பாக என்னுடைய சில வார்த்தைகளையும், வருத்தத்தையும் இன்று நான் தெரிவிக்க விரும்புகின்றேன். பசு பக்தி என்ற பெயரில் மக்களை கொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை மகாத்மா காந்தியும் ஏற்றுக் கொண்டிருக்கமாட்டார்.
மகாத்மா காந்தி மற்றும் ஆச்சார்ய வினோபா பாவேவிட பசு பாதுகாப்பு தொடர்பாக யாரும் அதிகம் பேசியிருக்க மாட்டார்கள். சமுதாயத்தில் வன்முறைக்கு இடம் கிடையாது. இந்த தேசத்தில் யாரும் சட்டத்தை கையில் எடுக்க உரிமை கிடையாது. அனைவரும் இணைந்து பணியாற்றுவோம். மகாத்மா காந்தியின் கனவு இந்தியாவை உருவாக்குவோம். நம்முடைய சுதந்திர போராட்ட வீரர்கள் பெருமையடையும் வகையில் இந்தியாவை உருவாக்குவோம். நாம் வன்முறையில்லாத தேசத்தை சேர்ந்தவர்கள்’’ என்றார்.