டெல்லி: நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் வகையிலான புதிய திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
கடந்த பிப்ரவரி 1-ந் தேதி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘வரி செலுத்துவோர் சாசனம்’ தொடங்கப்படும் என்றும், இந்த சாசனம், வரி செலுத்துவோருக்கும், வருமான வரித்துறைக்கும் இடையே நம்பிக்கையை வளர்க்கும் என்றும், வரி செலுத்துவோருக்கு தொந்தரவுகளை குறைக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
அதன்படி, நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்க ‘ஒளிவுமறைவற்ற வரிவிதிப்பு-நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கவுரவம்’ என்ற திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்குர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது:
நேர்மையாளர்களை பெருமை படுத்தும் திட்டம் செப்டம்பர் முதல் அமல்படுத்தப்படும். நேர்மையாக வரி செலுத்துபவர்கள் நாட்டின் வளர்ச்சி மீது அக்கறை கொண்டவர்கள். மத்திய அரசின் திட்டங்கள் மக்களை எளிதில் சென்று சேருகின்றன. வரி விதிப்பில் செய்யப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
கடமையை மிக முக்கியமாக வைத்து அனைத்து வேலைகளையும் செய்து வருகிறோம். சீர்திருத்தங்களுக்கான சிந்தனை மற்றும் அணுகுமுறை மாறியுள்ளன. நாட்டு மக்கள் வாழ்க்கையில் இருந்து அரசின் தலையீட்டை குறைப்பதற்கான ஒரு பெரிய முயற்சி இதுவாகும்” என்றார்.