பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி அதிபர் ஐக்கிய நாடுகள் பொதுசபையில் பேசியதால், அந்நாட்டிற்கு இம்மாத இறுதியில் மேற்கொள்ள உள்ள பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுசபைக் கூட்டம் கடந்த மாதம் நடந்தது. அப்போது அதில் துருக்கி அதிபர் எர்டோகன், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையும், அங்கு மனித உரிமைகள் பறிக்கப்படும் நடவடிக்கைகளையும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி அதிபர் பேசியது, இந்தியாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன் எதிரொலியாக தற்போது துருக்கி பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி ரத்து செய்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பிரதமர் மோடி இம்மாத இறுதியில் 2 நாள் பயணமாக துருக்கி செல்ல இருந்தார். சவுதி அரேபியா சென்று அங்கிருந்து துருக்கி தலைநகர் அங்காரா செல்ல இருந்தார். அங்கு அக்டோபர் 27 மற்றும் 28ம் தேதிகளில் மெகா முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இதில் மோடி பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தார். சமீபத்தில் ஐக்கிய நாடுகள் பொதுசபைக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி அதிபர் பேசியதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியின் பயண திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.