கண்ணூர்:   நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் வயநாடு பகுதியை பார்வையிட சென்ற பிரதமரை  கேரள முதல்வர் பினராயி விஜயன்  நேரில் வரவேற்றார். கண்ணூரில் பிரதமர் விமானம் தரையிறங்கிய நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் ஆளுநர் வரவேற்றார்.

 வயநாட்டில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் பல்வேறு மலைக்கிராமங்களைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். நிலச்சரிவில் சிக்கிய 226-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மற்றும் 192 உடல் உறுப்புகள் மீட்கப்பட்டுள்ளன. நிலச்சரிவைத் தொடா்ந்து மாயமானவா்களின் எண்ணிக்கை சுமாா் 138-ஆக உள்ளது. மீட்பு-தேடுதல் பணிகள் தொடா்ந்து வரும் நிலையில், நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவா்களுக்கு தற்காலிக மறுவாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், கேரள மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்பை நேரில் பாா்வையிட பிரதமா் நரேந்திர மோடி ,‘கேரள மாநிலம், கண்ணூருக்கு இன்று (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் சென்றார். அவரை  மாநில கவர்னர் மற்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் நேரில் வரவேற்றனர். . பின்னா் அங்கிருந்து வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை ஹெலிகாப்டர்  வான்வழியாகப் பாா்வையிடுகிறாா்.

தொடர்ந்து,  நிவாரண முகாம் மற்றும் மருத்துவமனைக்கு சென்று, பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்துப் பேசவுள்ளாா். வயநாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகள், மறுவாழ்வுப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்திலும் பங்கேற்கவுள்ளாா்

. இந்த நிலையில், வயநாடு செல்லும் பிரதமர் மோடி வயநாட்டில் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட கடுமையான இயற்கை பேரழிவுகளை நேரில் பாா்வையிட்ட பின்னர், அதை தேசிய பேரிடராக அறிவிப்பார் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வயநாட்டில் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பாா்வையிடுவதற்காக சனிக்கிழமை அங்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. இதுவொரு நல்ல முடிவு. பேரழிவின் தீவிரத்தை நேரில் பார்வையிட்ட பின்னர், அதை தேசிய பேரிடராக அறிவிப்பார் என்று நம்புவதாக ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிப்பதிலும், இடம்பெயர்ந்த மக்களுக்கான விரிவான தொகுப்புக்கு ஒப்புதல் அளிப்பதிலும் பிரதமரின் வருகை முக்கியமானதாக இருக்கும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.