மேற்கு ஆசியாவில் அதிகரித்துள்ள நெருக்கடி குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழு ஆலோசனைக் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது.

காசா, லெபனான், சிரியா என இஸ்ரேல் தனது தாக்குதல் எல்லையை விரிவுபடுத்தி வரும் நிலையில் இஸ்ரேலை கட்டுப்படுத்தும் விதமாக ஈரான் ஏவுகணைகளை வீசியது.

இஸ்ரேல் மீதான ஈரானின் இந்த தாக்குதலை அடுத்து கடந்த இரண்டு நாட்களாக மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஈரானில் உள்ள பெட்ரோலிய ஆலைகள் மற்றும் எண்ணெய் வளங்களை இஸ்ரேல் குறிவைத்து தாக்கி அழிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்றிரவு தெரிவித்தார்.

இன்னும் ஒரு சில நாட்களில் இந்த தாக்குதல் இருக்கும் என்று பைடன் கூறியதை அடுத்து உலக நாடுகள் கலக்கம் அடைந்துள்ளன.

இதுகுறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் நேற்றிரவு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மேற்கு ஆசியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் மீதான தாக்குதல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் வர்த்தகம், சரக்கு போக்குவரத்து, எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் விநியோகச் சங்கிலி பெருமளவு பாதிக்கப்படும் என்றும் அதனால் இந்தியாவுக்கு ஏற்பட உள்ள பாதிப்பு குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகளின் நன்மை கருதி தாக்குதலை விரிவுபடுத்துவதை நிறுத்திவிட்டு, மோதலில் ஈடுபட்டுள்ள அனைவரும் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஈரானின் அணுஆயுத கிடங்குகளை குறிவைக்க வேண்டாம்… இஸ்ரேலுக்கு அமெரிக்கா அறிவுரை… எண்ணெய் கிடங்குகளுக்கு குறி ?