கன்னியாகுமரி: பிரதமர் மோடி குமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள்  தியானம்  இருக்கும் செயலானது, தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல என மாவட்ட தேர்தல் அதிகாரியும், குமரி மாவட்ட ஆட்சி தலைவருமான ஸ்ரீதர்,  திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க் கட்சிகளுக்கு  பதில் அளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், கன்னியாகுமரியில் தியானம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகிறார். இன்று முதல் 31-ம் தேதி வரை அவர், விவேகானந்தா பாறையில் தியானத்தை மேற்கொள்கிறார். அவரது 3 நாள் தியானம் நடவடிக்கை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருவதுடன், தமிழ்நாட்டில், திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், மோடியின் தியானத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளன.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய குமரி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஸ்ரீதர், ‘பிரதமர் வருவது தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல’ என பதில் தெரிவித்துள்ளார்.  மேலும்,  பிரதமர் மோடி இன்று (மே 30) மாலை 4:35 மணிக்கு கன்னியாகுமரி வந்து விவேகானந்தர் பாறையில் தியானத்தை துவங்குகிறார். ஜூன் 1ல் அங்கிருந்து கிளம்புகிறார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாகவும், 3 நாட்கள் மீனவர்கள் அந்த பகுதியில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும்,   பிரதமரின் வருகையும், தியானமும் தனிப்பட்ட நிகழ்வு என்பதால் அனுமதி கோரப்படவில்லை,” என்றும்  பிரதமர் மோடி தியானம் செய்யும் மூன்று நாள்களும், பாதுகாப்புப் படையினர், மருத்துவக் குழுவினர், கேந்திரா பணியாளர்கள் மட்டுமே விவேகானந்தர் பாறையில் தங்கியிருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.