சென்னை: நாடாளுமன்ற தேர்தல் பரபரப்புக்கு மத்தியில், பிரதமர் மோடி இன்று முதல் 3 நாட்கள் தியானம் மேற்கொள்கிறார். குமரி கடலிலி உள்ள விவேகானந்தர் பாளையில், பிரதமர் மோடி இன்று மாலை தியானத்தை மேற்கொள்ள உள்ளார். இதையடுத்து, குமரி மாவட்டம் மற்றும் கடற்கரை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன,.
3 நாள் தியானத்தை மேற்கொள்வதற்காக இன்று மாலை 5 மணியளவில் கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி, மாலை 6 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானத்தை தொடங்குகிறார். ஜூன் 1 ஆம் தேதி மதியம் 3 மணி வரை அதாவது, 45 மணி முதல் 48 மணி நேரம் வரை அவர் தொடர் தியானத்தில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
18வது மக்களவைக்கான பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 6கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், கடைசி மற்றும் 7வது கட்ட தேர்தல் ஜூன் 1ந்தேதி நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, ஜூன் 4ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியும், ஆட்சியை கைப்பற்ற இண்டி கூட்டணியும் தீவிரமான தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், எப்போதும் போல, பொதுத்தேர்தல் நடைபெறும் காலங்களில் புன்னிய ஸ்தலங்களுக்கு சென்று, தியானத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி, இன்று மாலை முதல் குமரியில் உள்ள விவேகானந்தர் தியானம் மேற்கொண்ட இடத்தில் தியானம் மேற்கொள்கிறார். மோடி ஏற்கனவே, கடந்த 2014ம் ஆண்டு பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததும், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிரதாப்கர் கோட்டையிலும், 2019-ம் ஆண்டு இமயமலையில் உள்ள கேதார்நாத் குகையிலும் தியானம் மேற்கொண்டார். அதைத்தொடர்ச்சியாக, தற்போது, நாடாளுமன்ற தேர்தல் நிறைவடையும் நிலையில், கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார்.
இதன் காரணமாக, இன்று பிற்பகல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு வரும் பிரதமர், பிற்பகல் 3.55 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு மாலை 4.35 மணிக்கு வந்தடைகிறார். அங்கிரந்த, கார் மூலம் மாலை 5.15 மணிக்கு கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலை வந்தடைந்து அங்கு சாமி தரிசனம் செய்கிறார். அதைத்தொடர்ந்து, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகு தளத்துக்கு சென்று தனிப்படகு மூலம் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை அடைகிறார்.
அங்கு விவேகானந்தர் சிலைக்கு மரியாதை செலுத்தி விட்டு தியான மண்டபத்துக்கு சென்று மாலை 6 மணி அளவில் தியானத்தை தொடங்குகிறார். அங்கேயே தங்கியிருந்து வரும்சனிக்கிழமை வரை தியானம் செய்ய உள்ளார். இதற்காக விவேகானந்தர் மண்டபத்தில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அவரது தியானம் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறும் ஜூன் 1ம் தேதி மதியம் 3 மணிக்கு முடிவடைகிறது. அங்குள்ள திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தி தியானத்தை முடிவு செய்துகொள்கிறார் பிறகு தனி படகு மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகு தளம் வந்து சேர்கிறார்
அங்கிருந்து காரில் ஏறி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு வருகிறார். பிறகு பிற்பகல் 3.25 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். மாலை 4.05 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும் அவர் 4.10 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். இரவு 7.30 மணிக்கு டெல்லியை சென்றடைகிறார்.
பிரதமர் மோடி தங்கியிருந்து தியானம் மேற்கொள்ள இருப்பதை முன்னிட்டு, கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மாவட்டம் முழுவதும் காவல்துறையின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. விவேகானந்தர் மண்டபம் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடல் பகுதிகளில் அசம்பாவிதங்களை தவிர்க்க கடலோர காவல் படையினர் கடந்த இரண்டு தினங்களாகவே இரவு, பகலாக கடலோர காவல்படை படகுகள் மற்றும் கப்பல்கள் மூலம் ரோந்து மூலம் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்திய கடற்படைக்கு சொந்தமான 2 கப்பல்களும் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சிறிது தொலைவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. சுற்றளவுக்கு கடல் பகுதியில் மீனவர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.