போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை உக்ரைன் செல்லவுள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா இடையே போர் மூண்ட பிறகு முதல்முறையாக உக்ரைன் செல்லும் இந்திய பிரதமர் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க உள்ளார்.
இதற்காக போலந்தில் இருந்து ‘ட்ரெயின் போர்ஸ் ஒன்’ என்ற ரயில் மூலம் உக்ரைன் தலைநகர் கிவ் செல்லவுள்ளார்.
போலந்தில் இருந்து இன்றிரவு புறப்படும் பிரதமர் 20 மணி நேர பயணத்துக்குப் பின் கிவ் சென்றடைவார்.
ரஷ்யா – உக்ரைன் இடையே போர் துவங்கியதும் உக்ரைனில் உள்ள விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டதை அடுத்து அந்நாட்டுக்கு செல்லும் முக்கிய தலைவர்கள் அனைவரும் ரயில் மூலமே பயணம் செய்கின்றனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரெஞ்சு அதிபர் மெக்ரோன், ஜெர்மன் அதிபர் ஓலோப் ஸ்கோல்ஸ் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் இந்த ‘ட்ரெயின் போர்ஸ் ஒன்’ ரயிலில் பயணித்துள்ளனர்.
கிரிமியா சுற்றுலா பயணிகளுக்காக 2014ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சொகுசு ரயிலில் நட்சத்திர விடுதிக்கு இணையான சகல வசதிகளும் உள்ளது.
முக்கிய கூட்டங்களுக்கு பெரிய மேஜையுடன் கூடிய அறை. சோபா, டி.வி., தவிர தூங்குவதற்கு மற்றும் ஓய்வு எடுக்க தனித்தனி அறைகள் உள்ளது.
ரயிலில் விஐபி பயணிகளைப் பாதுகாக்க மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளன. கவச ஜன்னல்கள் முதல் பாதுகாப்பான தகவல் தொடர்பு அமைப்புகள் வரை, மிகவும் சவாலான சூழலைக் கையாளும் வகையில் டிரெய்ன் ஃபோர்ஸ் ஒன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலில் கண்காணிப்பு அமைப்புகள், பாதுகாப்பான தகவல் தொடர்பு நெட்வொர்க் மற்றும் பிரத்யேக பாதுகாப்பு பணியாளர்கள் குழு ஆகியவை உள்ளன.
இத்தனை பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய டிரெய்ன் ஃபோர்ஸ் ஒன் சொகுசு ரயிலில் பயணம் செய்ய உள்ள பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனான சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தை என மொத்தம் 7 மணி நேரம் உக்ரைனில் இருப்பார் என்று கூறப்படுகிறது.