பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவின் கசான் நகருக்கு இன்று சென்றடைந்தார். இங்கு ரஷ்ய அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுகுறித்து பேசிய புடின், “எங்கள் உறவுகள் மிகவும் நன்றாக உள்ளன, மொழிபெயர்ப்பாளர் இல்லாமல் நான் சொல்வதை புரிந்துகொள்கிறீர்கள்.” என்று மோடியைப் பார்த்துக் கூறினார்.
அதேவேளையில், உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்திய பிரதமர் மோடி, ஒவ்வொரு பிரச்சனைக்கும் அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்தியாவின் ஒவ்வொரு முயற்சியும் மனிதகுலத்திற்கு ஆதரவாகவே உள்ளது. கூடிய விரைவில் அமைதி திரும்ப வேண்டும் என்று கூறினார்.
பிரதமர் மோடி கடந்த 4 மாதங்களில் இரண்டாவது முறையாக ரஷ்யா சென்றுள்ளார். முன்னதாக, அவர் ஜூலை மாதம் ரஷ்யா சென்றிருந்தபோது, வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களால் அமைதி சாத்தியமில்லை என்று புடினுக்கு அறிவுரை கூறியிருந்தார்.
இதன் பிறகு உக்ரைனுக்கும் சுற்றுப்பயணம் சென்ற மோடி உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியிடம் இது போருக்கான நேரம் அல்ல என்று கூறினார்.
முன்னதாக, விமான நிலையம் வந்தடைந்த மோடிக்கு லட்டு, ரொட்டி, உப்பு கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் அங்குள்ள என்ஆர்ஐகளையும் சந்தித்தார்.
இதைத் தொடர்ந்து, கசானில் உள்ள ஹோட்டலை அடைந்த அவர், இந்திய ஆடைகளை அணிந்த ரஷ்ய கலைஞர்களின் நடனத்தையும் பார்த்தார்.
இன்று மாலை பிரிக்ஸ் தலைவர்களுடன் இரவு விருந்தில் கலந்து கொள்ளும் மோடி இரவு உணவின் போது, பல்வேறு நாட்டு தலைவர்களுடன் அதிகாரபூர்வமற்ற பேச்சுக்களை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதன்கிழமை நடைபெறும் பிரிக்ஸ் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பார் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது இரண்டு அமர்வுகளாக நடைபெறும் நடைபெறும் என்றும் முதலில் காலையில் ஒரு மூடிய முழுமையான கூட்டம் அதாவது ஒரு மூடிய அறை விவாதம் இருக்கும்.
இதைத் தொடர்ந்து மாலையில் திறந்தவெளி கலந்தாய்வு நடைபெறும் என்றும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.