சென்னை: பிரதமர் மோடி இரண்டு நாய் பயணமாக தமிழ்நாடு வருகை தர உள்ள நிலையில், சென்னையில், இரண்டு நாட்கள் ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்கவிடத்தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி வருகிற 28-ந்தேதியன்றும், மார்ச் 1-ந்தேதியன்றும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அதற்காக நாளை மறுதினம், அதாவது பிப்ரவரி 28-ந்தேதியன்று இரவு தனி விமானத்தில் சென்னை வரும் பிரதமர், அன்றைய தினம் இரவு கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். மறுநாள் மார்ச் 1-ந்தேதியன்று ஹெலிகாப்டர் மூலம் சென்னையில் இருந்து பிரதமர் புதுச்சேரி செல்கிறார். புதுச்சேரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு, மதுரையில் நடக்கும் பொதுகூட்டத்திலும் பிரதமர் பங்கேற்கிறார். பின்னர் மார்ச் 1-ந்தேதியன்று இரவு பிரதமர் தமிழக சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி செல்கிறார்.
பிரதமர் சென்னை வருகையையொட்டி கிண்டி, மீனம்பாக்கம் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் டிரோன்கள் பறப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. விமான நிலையத்தில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு பிரதமர் செல்லும் வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கிண்டி ஆளுநர் மாளிகையும் பலத்த பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்படுகிறது.
டெல்லியில் உள்ள பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை குழு சென்னை விமான நிலையம் வந்தனர். பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சிறப்பு ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதையடுத்து, சென்னை மீனம்பாக்கம், கிண்டி பகுதியில் வரும் 28ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்கவிடத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “VVIP சென்னைக்கு 28.02.2026 மற்றும் 01.03.2026 ஆகிய இரண்டு நாட்களுக்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மீனம்பாக்கம் கிண்டி ஆகிய பகுதிகள் மற்றும் வழித்தடங்கல் “சிவப்பு மண்டலமாக (RED ZONE)” அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக அரசு ஏற்பாடுகளைத் தவிர, 28.02.2026 மற்றும் 01.03.2026 ஆகிய இரண்டு நாட்களில் மேற்குறிப்பிட்ட இடங்களில் ட்ரோன் கேமராக்கள் மற்றும் ஆளில்லா வான்வழி கருவிகள் (Unmanned Aerial Objects) பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
மேலும், 2023ஆம் ஆண்டு, பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா பிரிவு 163ன் கீழும், 2023ஆம் ஆண்டு பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா பிரிவு 14ன் உட்பிரிவு (2) கீழும், ட்ரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ லைட் ஏர்கிராஃப்ட் பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேன்ட் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றை சென்னை பெருநகரில் பறக்க விட 19.02.2026 முதல் 19.04.2026 வரை தடை செய்யப்பட்ட ஆணை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]