சென்னை: ராஜஸ்தானில் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையின்போது, சிறுபான்மை இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராக விஷமத்தனமான கருத்துகளைக் கூறியிருக்கிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை குற்றம் சாட்டி உள்ளார்.
மக்களவை தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் முடிவடைந்த நிலையில், வரும் 26ம் தேதி 13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த சூழலில் ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது காங்கிரஸ் மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார். மேலும், நாட்டில் உள்ள சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்றும் அதிக குழந்தைகளை பெற்றவர்களுக்கு சொத்துக்கள் பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும்போது கூறியதாக தெரிவித்திருந்தார். பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் செல்வப்பெருந்தகை கூறியதாவது, பிரதமர் பதவியை வகிக்க தமக்கு தகுதியில்லை என மோடி உறுதிப்படுத்தியுள்ளார்.
முதற்கட்ட தேர்தல் பாஜகவுக்கு எதிர்பார்த்த வெற்றியை தராது என்பதால் தோல்வி பயத்தில் அரசியல் ஆதாயத்திற்காக மிக மிக இழிவான தேர்தல் பரப்புரையை செய்து வருகிறார். பிரதமரின் பரப்புரை மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறாததை திரித்து, 2006இல் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் பேசியதன் முன்பகுதியையும், பின்பகுதியையும் விட்டுவிட்டு இடையில் சில வார்த்தைகளை மேற்கோள் காட்டி திரிபு வாதங்களைச் செய்திருக்கிறார்.
அவரது இந்தப் பரப்புரையின் மீது இந்தியத் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை விடுத்திருக்கிறது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சமூக நீதிக்காக சமூகப் பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்” என்று கூறப்பட்டிருக்கிறதே தவிர, ‘தாய்மார்களிடம், சகோதரிகளிடம் இருக்கும் தங்கத்தைக் கணக்கெடுத்து அதை மற்றவர்களுக்குக் (இஸ்லாமியர்களுக்கு) கொடுப்போம்’ என்று குறிப்பிட்டிருப்பதாக அப்பட்டமான ஒரு பொய்யைக் கூறியிருக்கிறார்.
மேலும், “அதிக குழந்தைகளைப் பெற்றுகொள்பவர்கள் ஊடுறுவல்காரர்கள்” என மறைமுகமாக இஸ்லாமிய சமுதாயத்தினரைக் கொச்சைப் படுத்தியிருக்கிறார். இத்தகைய கோயபல்ஸ் பிரச்சாரத்தின் மூலம் அரசியல் ஆதாயம் தேட முற்படும் பிரதமர் மோடிக்கு இனிவருகிற தேர்தல்களில் மக்கள் உரிய பாடத்தைப்புகட்டுவார்கள்.
இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கிற ‘நவீன கோயபல்ஸ்’க்கு உரிய படிப்பினையை மக்கள் வழங்குவார்கள் என்பது உறுதி!
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.