டெல்லி: உலகின் சக்தி வாய்ந்த தலைவர் பிரதமர் மோடி என்றும், மோடி பிரதமராக இருக்கும் வரை இந்தியா யாருக்கும் தலை வணங்காது, இந்தியா கூட்டணி ஒருபோதும் நாட்டுக்காக உழைத்தது இல்லை என  தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பேசிய   சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், பவன் கல்யாண் புகழாரம் சூட்டினார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதையடுத்து, அவர் 3வது முறையாக ஆட்சி அமைக்க குடியரசு தலைவரை சந்தித்து அனுமதி கோரினார். அதை ஏற்று ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஏற்று நாளை (ஜுன் 9ந்தேதி)  மாலை 6மணிக்கு 3வது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்கிறார். இது வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது. நேருவுக்கு பிறகு, 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்பவர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாஜக கூட்டணி எம்.பிக்கள் கூட்டம் பழைய நாடாளுமன்றத்தின் வளாகத்தில் நேற்று (ஜூன் 7ந்தேதி( நடைபெற்றது.  இதில் தேர்தலில் வெற்றிபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.பி.க்கள், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள்,  பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங், சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், ஏக்நாத் ஷிண்டே, பவன் கல்யாண் உள்பட  பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.

நிதிஷ்குமார்:

இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக மோடியை தேர்வு செய்ய ஆதரித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமார் பேசினார். அப்போது,   “பீகாரில் நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் செய்து முடிக்கப்படும். நாங்கள் அனைவரும் ஒன்றிணைவது மிகவும் நல்ல விஷயம், நாங்கள் அனைவரும் பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்படுவோம். நீங்கள் ஞாயிற்றுக்கிழமை பிரதமராகப் பதவியேற்க உள்ளீர்கள். ஆனால் இன்றே நீங்கள் அதைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்பினேன். நீங்கள் உறுதிமொழி எடுக்கும் போதெல்லாம் நாங்கள் உங்களுடன் இருப்போம். உங்கள் தலைமையில் நாங்கள் அனைவரும் இணைந்து செயல்படுவோம்.

எதிர்க்கட்சிகள்  (இண்டியா கூட்டணி) ஒருபோதும் நாட்டுக்காக உழைத்ததில்லை. அவர்கள் ஒருபோதும் நாட்டுக்குச் சேவை செய்ததில்லை. பிரதமர் மோடி தலைமையில் நாடு முன்னேறும். அடுத்த முறை மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்த முறை அவர்கள் பெற்ற எந்த இடத்திலும் அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்று நான் உணர்கிறேன்” என்று கூறினார்.

சந்திரபாபு நாயுடு:

தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பேசும்போது,  உலகளவில் சிறந்த தலைவர் பிரதமர் மோடி. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் மகத்தான வளர்ச்சி அடைந்துள்ளோம். மோடி கூறியதுபோல், உலகளவில் 2047-ல் இந்தியா வளர்ந்த மற்றும் வல்லரசு நாடாக மாறும். உலகின் சக்தி வாய்ந்த தலைவர் பிரதமர் மோடி. சரியான நேரத்தில் சரியான தலைவரை இந்தியா மீண்டும் தேர்வு செய்துள்ளது. மோடியின் பிரசாரம் ஆந்திராவில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

நான் சிறையில் இருந்த போது என்னை கண்டுக் கொள்ள ஆள் இல்லை. என் மகன் அமித்ஷா ஜியை சந்தித்த பிறகுதான் பல உதவிகள் கிடைக்கப் பெற்று மீண்டு வந்தேன்.  ஆந்திராவில் நான் முதல் மந்திரி ஆனதற்கும் பாஜகவின் ஆதரவு முக்கிய காரணம்.  எனக்கு எதிராக பல்வேறு வகையில் சதி செய்த கூட்டங்கள் எல்லாம் நான் அவர்களோடு வருவேன் என நினைப்பது சிரிப்பை வரவழைக்கிறது.  நான் நன்றி உள்ளவன். மோடிஜியோடு இணைந்து இந்தியாவை மிகப்பெரும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு போவது மிகபெரும் பாக்கியமாகும் என கூறினார்.

பவன் கல்யாண்:

நாட்டின் பிரதமராக மோடி இருக்கும் வரை இந்தியா யாருக்கும் அடிபணியாது என நடிகரும். ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மேலும்  15 ஆண்டுகள் இந்தியாவை ஆள வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார். கடந்த 2014ஆம் ஆண்டில் இதே இடத்தில் பிரதமர் மோடி 15 ஆண்டுகள் ஆள வேண்டும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்தது உண்மையாகியுள்ளதாகவும் பவன் கல்யாண் குறிப்பிட்டார்.