வாரணாசி: தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையுடன் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்
நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலக்கியம், பழங்கால நூல்கள், தத்துவம், ஆன்மீகம், இசை நடனம், நாடகம், யோகா, ஆயுர்வேதம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், நவீன கண்டுபிடிப்புகள் வர்த்தகம் போன்ற பல்வேறு அம்சங்களை பற்றிய கருத்தரங்குகள், விவாதங்கள், விரிவுரைகள் போன்றவை இந்த நிகழ்ச்சியில் நடைபெற உள்ளது.
பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் இந்த கொண்டாட்ட விழா நடைபெறவுள்ளது. இதனால் பிரதமர் மோடி மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இந்த கொண்டாட்ட நிகழ்வு குறித்து ஏற்கனவே பதிவுகள் இட்டிருந்தனர். இந்த கொண்டாட்ட நிகழ்வு ஒரு மாத காலத்திற்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 17ந்தேதி நிகழ்ச்சிதொடங்கியது.
இந்த நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வமான தொடக்க விழா இன்று வாரணாசியில் நடைபெற்றது. பிரதமர் மோடி தமிழ் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்து வந்து, விழாவினை தொடங்கி வைத்தார். முன்னதாக விழாவுக்கு வந்த பிரதமரை, தமிழ்நாடு சார்பில், மத்திய அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னார், இசைஞானி இளையராஜா ஆகியோர் வரவேற்றனர்.
முன்னதாக நவம்பர் 12-ஆம் தேதி தமிழ்நாடு காந்தி கிராமம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்க வருகைதந்த பிரதமர் மோடி, தமிழ்தான். தமிழின் தொன்மையை பறைசாற்றுவது தமிழர்களின் கடமை அல்ல, இந்தியர்களின் கடமை” எனத் தெரிவித்திருந்தார். மேலும், காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க தனது தொகுதியான வாரணாசிக்கு வருகை தரும் முதல் குழுவை வரவேற்கத்தான் அங்கே இருப்பேன் எனத் தெரிவித்திருந்தார். பிரதமராகவும், வாரணாசி எம்பியாகவும் அங்கிருந்து அவர்களை வரவேற்று தமிழ்நாடு கலாச்சாரத்தை பறைசாற்றக்கூடிய அனைத்து விஷயங்களையும் தான் கண்டுகளிக்கப்போவதாகவும், காசி மக்களுக்கு இது குறித்து எடுத்துச் சொல்லப் போவதில் தான் பெருமையடைவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், இசை, நடனம், நாடகம், நாட்டுப்புற கலை, யோகா, ஆயுர்வேதம் சார்ந்த கலாச்சார வல்லுநர்கள், தொழில் முனைவோர், தங்கும் விடுதி உரிமையாளர்கள், கைவினைஞர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், வலைப்பதிவர்கள் வாரணாசி சென்றுள்ளனர். மேலும் அறநிலையத்துறை சார்பில் 200 பேர்களை அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கை தொடங்கி உள்ளது.
முன்னதாக ராமேஷ்வரத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் கடந்த 16ந்தேதி முதல் குழு புறப்பட்டு சென்றது. இந்த குழுவினருடன் 17ந்தேதி சென்னையில் பலர் இணைந்த நிலையில், அவர்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி எழும்பூர் ரயில் நிலையத்தில் முதல் குழுவில் இடம் பெற்றுள்ளவர்களுடன் கலந்துரையாடி, அவர்களை வழி அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் இன்று காசி தமிழ் சங்கமம் விழா கோலாகலமாக தொடங்கி உள்ளது. இந்த நிகழ்வில் இசைஞானியின் இசைவிழா அங்கிருந்தோரிடம் பெரும் வரவேற்பை பெற்றது.