2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து பிரதமர் மோடி கன்னியாகுமரி வந்துள்ளார்.

இன்று மாலை 6 மணி முதல் 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறும் ஜூன் 1ம் தேதி மாலை வரை மூன்று நாட்கள் கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தில் ஈடுபட உள்ளார்.

அதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்தார்.

கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த அவர் மாலை 6 மணி முதல் விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தில் ஈடுபடுகிறார்.

பிரதமரின் தனிப்பட்ட நிகழ்ச்சி என்பதால் இதில் பங்கேற்க வந்த பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் திரும்பிச் சென்றனர்.

பிரதமரின் இந்த நிகழ்ச்சிக்காக நாடு முழுவதும் இருந்து பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் கன்னியாகுமரியில் குவிந்துள்ளதால் பொதுமக்கள் வருகை பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு அங்குள்ள விடுதிகள் அனைத்திலும் பத்திரிகையாளர்கள் குவிந்துள்ளனர்.

மோடியின் வருகையை ஒட்டி கடந்த இரண்டு நாட்களாகவே கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் கண்காணிக்கப்பட்ட நிலையில் பகவதி அம்மன் கோயில் பிரசாதம் முதற்கொண்டு அனைத்தும் இன்று காலை முதல் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது.