லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி படிக்கட்டில் ஏறும்போது தடுக்கி விழ ஒரு கணம் அனைவரும் அதிர்ந்து போயினர்.

அதிக கழிவுகளையும், மாசுக்களையும் கொண்ட கங்கை நதியை தூய்மைப் படுத்த தேசிய கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் முதல் கூட்டம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

கூட்டத்தில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தரகண்ட் முதலமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி சென்றார்.

வழக்கமாக வேகமாக நடக்கும் பிரதமர் மோடி, அந்த கூட்டம் நடைபெறும் மைதான கட்டிடத்தை அடைந்தார். பின்னர் வேகவேகமாக படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கினார்.

ஒரு விநாடி… தான்.. யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் கால்தடுக்கி கீழே விழுந்தார். உடனடியாக கைகளை தரையில் ஊன்றி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். அவருடன் இருந்த பாதுகாப்பு வீரர்களும் மோடியை பிடித்து கைத்தூக்கிவிட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.