சென்னை: ராகுலை குற்றம் சொல்வது பிரதமர் மோடியின் அரசியல் மோசடி என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை கூறியுள்ளார்.
பின்தங்கிய சாதியினரிடையே மோதலை உருவாக்க ராகுல்காந்தி முயற்சிக்கிறார் என்ற குற்றச்சாட்டை மோடி கூறுகிறார். மக்களை பிளவுபடுத்துகிறார் என்று குற்றச்சாட்டு கூறுவதை விட ஒரு அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசமைப்புச் சட்டம் உறுதி செய்திருக்கிற சமூக நீதியை அனைவருக்கும் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அனைத்து மக்களையும் உள்ளடக்கி, உரிய பிரதி நிதித்துவத்தை நோக்கமாக கொண்டது தான் சாதிவாரி கணக்கெடுப்பு.
கடந்த 2021-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகிற மோடி அரசு உடனடியாக அதனை நடத்துவதோடு, அதனுடன் சாதி வாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டுமென்பது தான் தலைவர் ராகுல்காந்தியின் முக்கியமான கோரிக்கையாகும். அதனை எதிர்கொள்ள முடியாத பிரதமர் மோடி, பின்தங்கிய சாதியினரிடையே மோதலை உருவாக்க ராகுல்காந்தி முயற்சிக்கிறார் என்ற குற்றச்சாட்டை கூறுகிறார்.
மதரீதியாக மக்களை பிளவுபடுத்துகிற பா.ஜ.க.வின் அரசியலை எதிர்த்து தான் தேசிய ஒற்றுமை பயணத்தின் மூலம் மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்காக 10,000 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொண்டு தம்மை வருத்திக் கொண்ட தலைவர் ராகுல்காந்தியை பார்த்து, மக்களை பிளவுபடுத்துகிறார் என்று குற்றச்சாட்டு கூறுவதை விட ஒரு அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ராகுல்காந்தி, இந்த தேர்தலானது, இண்டிய கூட்டணி அணிக்கும் பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணிக்கும் இடையேயான சித்தாந்தத்தின் சண்டை என்று அவர் குறிப்பிட்டதுடன், ஆர்எஸ்எஸ்-பாஜகவின் நோக்கம் நாட்டின் அரசியலமைப்பை “அழிப்பது” என்று காங்கிரஸ் தலைவர் குற்றம் சாட்டினார், அதே நேரத்தில் இந்திய அணி அதை “பாதுகாக்க விரும்புகிறது”.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஜாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இடஒதுக்கீட்டில் 50 சதவீத உச்சவரம்பு நீக்கப்படுவதை உறுதி செய்யும் என்று கூறியதுடன், அரசியலமைப்பு தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது, அது பாதுகாக்கப்பட வேண்டும். 50 சதவீத இடஒதுக்கீட்டின் உச்ச வரம்பை எப்படி வேண்டுமானாலும் அகற்றுவோம். ஜார்க்கண்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், எஸ்டியினருக்கான இடஒதுக்கீட்டை தற்போது இருந்து 28 சதவீதமாக உயர்த்துவோம். 26 சதவிகிதம், எஸ்சிக்கள் தற்போதைய 10 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதம் மற்றும் ஓபிசிக்கள் 14 சதவிகிதத்தில் இருந்து 27 சதவிகிதம்” என்று அவர் கூறினார்.
நாட்டின் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் செல்வங்களில் “பழங்குடியினர், தலித்துகள் மற்றும் ஓபிசிகளின் பங்களிப்பை அடையாளம் காண சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கு பதில் கூறிய பிரதமர் மோடி, ராகுல், மக்களிடையே சாதி பிரச்சினைகளை தூண்டுவதாக விமர்சனம் செய்திருந்தார். ஜாதியின் பெயரால் நாட்டை பிளவுபடுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.