நேபாளத்தில் மன்னராட்சிக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற முக்கிய குற்றவாளி இந்தியாவில் கைது
நேபாளத்தில் மன்னராட்சிக்கு ஆதரவாக மார்ச் 28ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது இந்த வன்முறையில் ஒரு போராட்டக்காரர் மற்றும் ஒரு பத்திரிகையாளர் என இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
போராட்டத்தில் பங்கேற்றதற்காக ராஷ்ட்ரிய பிரஜாதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தவால் ஷம்ஷேர் ராணா மற்றும் துணைத் தலைவர் ரவீந்திர மிஸ்ரா உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்திய எல்லையை ஒட்டிய ஜாபா மாவட்டத்தைச் சேர்ந்த போராட்டக்காரர் துர்கா பர்சாய் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் துர்கா பர்சாயையும் அவரது மெய்க்காப்பாளரையும் நேபாள காவல்துறை கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஊடக அறிக்கைகளின்படி, பர்சாயை அசாம் போலீசார் கைது செய்து நேபாள போலீசாரிடம் ஒப்படைத்ததாகவும் நேபாள போலீசார் அவரை ஜாபாவிற்கு அழைத்து வந்ததாகவும் கூறியுள்ளது.
நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே எந்தவொரு நாடுகடத்தல் ஒப்பந்தமும் நடைமுறையில் இல்லை என்பதால் பர்சாய் அசாமில் கைது செய்யப்பட்டது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
மன்னராட்சி நடைபெற்று வந்த நேபாளத்தில் 2006ம் ஆண்டு நடைபெற்ற வன்முறையை அடுத்து மன்னர் ஞானேந்திரா தனது அதிகாரத்தை இழந்தார்.
இதன் பிறகு, அனைத்து அதிகாரங்களும் பாராளுமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டு, 2008 ஆம் ஆண்டு நேபாளத்தில் 240 ஆண்டுகால மன்னராட்சி முடிவுக்கு வந்தது.
இப்போது மீண்டும் மன்னராட்சியைக் கொண்டுவர வேண்டும் என்றும் அரசியலமைப்பையும் முடியாட்சியையும் இந்து தேசத்தையும் மீட்டெடுப்பதே நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வாகும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
நேபாளத்தில் மன்னராட்சியை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்ற கோரிக்கையின் காரணமாக போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் வன்முறை சம்பவங்களுக்கு அரங்கேறியுள்ளது.