உ.பி. முதல்வராகிறார் அதிரடி சாமியார்! இனி என்னென்ன நடக்குமோ?

உ.பி. முதல்வராக பாஜக எம்.எல்.ஏக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளளார், யோகி ஆதித்யநாத்.

1972ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி பிறந்த இவரது இயற்பெயர் அஜய்சிங். உ.பி.யின் கோரக்பூர் பாராளுமன்ற தொகுதியிலிருந்து ஐந்து முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். முதன்முறை எம்.பி. ஆனபோது இவரது வயது 26 தான்.

ஆகவே மிகக் குறைந்த வயதிலேயே எம்.பியானவர் என்ற சாதனை படைத்தவர்.
பிரமச்சாரியான இவர், கோர்காநாத் மடத்தின் சாமியாராக இருந்து வருகிறார்.
இவருக்கு குரங்கு என்றால் மிகவும் பிரியம். ஆஞ்சநேயரின் அவதாரம் என்று சொல்லி ஆராதிப்பார். குரங்குகளை வளர்ப்பதில் மிக ஆர்வம் உள்ளவர்.
தொடர்ந்து சர்ச்சைக்கிடமான கருத்துக்களை வெளிப்படுத்தி வருபவர் இவர்.
அவற்றில் சில..

“ஒவ்வொரு மசூதிகளிலும் விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும்!”

“பசுவை பாரத மாதாவாக அறிவிக்க வேண்டும்!”

“சூரிய நமஸ்காரத்தை எதிர்ப்பவர்கள் கடலில் மூழ்கி சாவுங்கள்!”

“யோகாசனம் செய்யாதவர்கள் இந்தியாவை விட்டு ஓடி விடுங்கள்!”

“நாடு முழுவதும் மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும்!”

“அனுமதி கிடைத்தால் ஒவ்வொரு மசூதியிலும் விநாயகர், கௌரி மற்றும் நந்தி சிலைகளை வைப்பேன்!”

எப்படி இருக்கிறது முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சுக்கள்?
இவை மட்டுமல்ல… 2015ல் லஷ்கர் தீவிரவாத குழு தலைவர் ஹபீஸ் சையதுவுடன், நடிகர் ஷாரூக்கானை ஒப்பிட்டு பேசியும் சர்ச்சையைக் கிளப்பியவர் இவர்.
அவ்வப்போது பாஜகவுக்கும் இவருக்குமே முட்டிக்கொள்ளும்.

2006ம் ஆண்டு, லக்னோவில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடந்ததபோது அதில் கலந்துகொள்ளாமல், தனியாக ”விராட் ஹிந்து மகாசம்மேளனம்” என்ற பெயரில் கோரக்பூரில் நிகழ்ச்சி நடத்தினார்.

2007ம் ஆண்டு நடந்த உ.பி. சட்டசபை தேர்தலில் தனது ஆதராவளர்களுக்கு நூறு சீட் வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார். பிறகு ஆர்.எஸ். எஸ். தலையிட்டு இவரை சமாதானப்படுத்தியது. கடைசியில் எட்டு சீட்டுக்களோடு அமைதியானார்.
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்க பாஜக உத்தரவிட்டும் அதை எதிர்த்து வாக்களித்த எம்.பிக்களில் இவரும் ஒருவர்.

ஆக “இவரால் பிற மதத்தினர், கட்சியினருக்கு மட்டுமல்ல… பாஜகவுக்கும் தலைவலிதான்” என்கிறார்கள் உ.பி. அரசியல் நோக்கர்கள்.


English Summary
Priest become up chief minister ! What will happen now?