அலகாபாத்: சாதாரண சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்காக தடுப்புக் காவலை செயல்படுத்த முடியாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடியாக கூறி இருக்கிறது.

எம்எல்ஏ ஒருவர் சுடப்பட்ட வழக்கு ஒன்றில் இந்த தீர்ப்பை நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் இந்த வழக்கில் பிரேம் நாராயணன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

கனிம வள கொள்ளைக்கு எதிராக எம்எல்ஏ இறங்கியதால் அவரை சுட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். இதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

இந்த நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது, அரசியல் அழுத்தம் காரணமாக தம் மீது போடப்பட்டதாக அவர் கூறி இருந்தார். இது தொடர்பாக, பாதிக்கப்பட்டவரின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் அனுஜ் பாண்டே, பாதிக்கப்பட்டவர் முதலில் தாக்கப்பட்டதால் இந்த சம்பவம் நடந்ததாக கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளில் அவை முழுமையாக இடம் பெற்றுள்ளன. மேலும், மே மாதம் 2019ம் ஆண்டு ஏற்கனவே பிரேம் நாராயண் தொடர்ந்த வழக்கில் முதலில் விசாரணை தொடங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதை சுட்டிக்காட்டினார்.

ஆனால் இதை பின்பற்றாமல் தடுப்புக் காவல் பிரயோகப்படுத்தப்பட்டு உள்ளது என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதி மன்றம், தடுப்புக்காவலில் இருப்பவரை விடுவிக்குமாறு உத்தரவிட்டது.