கொச்சி: மும்பைக்கு தென்மேற்கே 760 கி.மீ. தூரத்தில் உருவாகியுள்ள காற்றழுத்த மண்டலத்தால், கேரளாவின் பல பகுதிகள், கடலோர மற்றும் தெற்கு கர்நாடகா, கொங்கன் பகுதி, கோவா மற்றும் லட்சத் தீவுகள் ஆகிய பகுதிகளில் கன மழை பொழியும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த காற்றழுத்த மண்டலம் புயலாக உருமாறி, சுமார் 115 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் அந்த மையத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த மண்டலம், வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து, குஜராத்தில் நிலைகொள்ளும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேசமயம், அப்படி நிகழவில்லை என்றாலும், அதன் தாக்கம் மேற்கு கடற்கரை முழுவதும் உணரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், கடலின் மேற்பரப்பு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதிகளிலும் மழைப் பொழிவு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தப் புயலுக்கு வாயு என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒருவார கால தாமதத்திற்கு பின்னரே, இந்தாண்டு கேரளாவை வந்தடைந்தது பருவமழை என்பது குறிப்பிடத்தக்கது.