ரஷ்யா உடனான போரை உடனே நிறுத்தவேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டதை அடுத்து இருவருக்கும் இடையே வார்த்தை போர் ஏற்பட்டது.
அமெரிக்க அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று சந்தித்தார்.
2022 முதல் நடைபெற்று வரும் ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதும் உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பிய ராணுவ உதவிகளுக்கு பதிலாக உக்ரைனின் கனிம வளங்களை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த சந்திப்பு நடைபெற்றது.
ஒரு பக்கம் தனது ராணுவ வீரர்களையும் நிலப்பகுதியையும் ரஷ்யாவிடம் இழந்து வரும் உக்ரைன் மற்றொரு புறம் அமெரிக்காவின் நெருக்குதலுக்கு ஆளாகி தனது கனிம வளங்களையும் இழக்கும் சூழலில் உள்ளது.
இதனால் இரண்டு பக்கம் அடிபடும் மத்தளமாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் நிலை மாறிப்போனது.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் முன் ஜெலன்ஸ்கியும் – டிரம்பும் பேசினர், இந்த பேச்சின் போது அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் மற்றும் உக்ரைன் நாட்டுக்கான உயர் அதிகாரிகள் மற்றும் அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர் ஆகியோர் இருந்தனர்.
மேலும், இந்த செய்தியாளர் சந்திப்பு உலகம் முழுவதும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.
அப்போது பேசிய அமெரிக்க துணை அதிபர் வான்ஸ், கடந்த நான்கு ஆண்டுகளில் ரஷ்யா உடனான போரை நிறுத்த முயற்சிப்பதாக அமெரிக்கா கூறிவந்தது ஆனால் அப்போதைய அதிபர் பைடனின் சொல்லும் செயலும் வேறுவேறாக இருந்தது.
தற்போது டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பிறகு சூழல் மாறியிருக்கிறது அவரது ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் போரை நிறுத்த முயற்சி செய்கிறார் என்று குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட ஜெலன்ஸ்கி, “நான் ஒன்று கேட்கிறேன் 2014ம் ஆண்டு அமெரிக்க அதிபராக பாராக் ஒபாமா இருந்த காலம் முதல் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது அதன்பின் டிரம்ப், பைடன், தற்போது மீண்டும் டிரம்ப், ஆனால் எங்களின் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கிறது.
இதில் என்ன ராஜதந்திரம் இருக்கிறது, அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளை ஒரு சந்தையாக தான் பயன்படுத்தி வருகிறது என்று குரல் கொடுத்தார்.
அப்போது குறுக்கிட்ட டிரம்ப், நாங்கள் போரை முடிவுக்கு கொண்டு வந்து சமாதானம் ஏற்படுத்த முயற்சி செய்கிறோம் ஆனால் உங்களின் இந்த பேச்சு மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்தும் அபாயமாக உள்ளது என்று கூறினார்.
இதனால் வெகுண்ட ஜெனலன்ஸ்கி கனிம வளம் உள்ளிட்ட அனைத்து பேச்சு வார்த்தைகளையும் ரத்து செய்து விட்டு அமெரிக்காவில் இருந்து உக்ரைன் புறப்பட்டார்.
அமெரிக்க அதிபர் மற்றும் உக்ரைன் அதிபர் இடையே நேருக்கு நேர் நடைபெற்ற இந்த மோதல் தற்போது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன்.
உக்ரைன் அதிபரிடம் அமெரிக்க அதிபர் இனி எவ்வாறு அணுகுவார் என்பதும் போர் நிறுத்தம் என்ன ஆகும் என்பதும் மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது.