மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று இரவு 8.30 மணி வரை தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க கவர்னர் கோஷ்யாரி அவகாசம் வழங்கி உள்ள நிலையில், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த தற்போது பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி, இன்று பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள பிரேசில் சென்ற நிலையில், முன்னதாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், கேபினட் அனுமதி பெறும் நோக்கில், ஆளுநர் கோஷ்யாரி, மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும், அதை மத்தியஅமைச்சரவை ஏற்று, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
288 உறுப்பினர் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத்துக்கு கடந்த அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. பா.ஜ 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களையும் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் கைப்பற்றின.
தேர்தலை கூட்டாக சந்தித்த பா.ஜ-சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இருந்தும், உத்தவ் தாக்கரே தனது மகனுக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்ற பிடிவாதம் காரணமாக, அங்கு பாஜக, சிவசேனா உடனான உறவு முறிந்தது. இதனால், பாஜக ஆட்சி அமைக்க முன்வரவில்லை.
இந்த நிலையில், மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி கடந்த வெள்ளிக்கிழமை, தற்போதைய நிலையில், தனிப்பெரும் கட்சியான பாஜ.வை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் பாஜ அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டது.
அதையடுத்து, 56 இடங்களை பெற்று 2வது பெரிய கட்சியாக விளங்கும், சிவசேனா ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டது. அடுத்த 24 மணி நேரத்தில், அதாவது நேற்று இரவு 7.30 மணிக்குள், ஆதரவு கடிதங்களை சமர்ப்பித்து ஆட்சி அமைக்க கெடு விதிக்கப்பட்டது.
இதையடுத்து, கவர்னர் கோஷியாரியை உத்தவ் தாக்கரேவின் மகனும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான ஆதித்யதாக்ரே உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் சந்தித்து மேலும் அவகாசம் கோரினர். ஆனால், கவர்னர் மேலும் அவகாசம் வழங்க மறுத்து விட்டார்.
சிவசேனாவிடம் 56 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ள நிலையில், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவை கோரி பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை உத்தவ் தாக்கரே சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது காங்கிரஸ் எடுக்கும் முடிவை பொறுத்துதான் ஆதரவு தருவது குறித்து முடிவெடுக்க முடியும் என்று சரத் பவார் கூறினார். ஆனால், காங்கிரஸ் கட்சி உறுதியான முடிவை தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், மாநிலத்தின் 3வது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க இன்று இரவு 8.30 மணி வரை, அதாவது 24 மணி நேரம் அவகாசம் அளித்து கவர்னர் அழைப்பு விடுத்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு காங்கிரஸ் கட்சி இதுவரை முழுமையான ஆதரவை தெரிவிக்காத நிலையில், இன்று மாலை ஆதரவு குறித்து தெரிவிக்கப்படும் என காங்கிரஸ் தலைமை தெரிவித்து உள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், மாநிலத்தின் சட்டமன்ற ஆயுட்காலம் நவம்பர் 9ம் தேதியுடன் முடிவடைந்து விட்டதாலும், ஆட்சி அமைக்கத் தேவையான பலம் எந்தக் கட்சிக்கும் இல்லாததாலும், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாம் என்று மத்திய அரசுக்கு ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.
இன்று மதியம் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மகாராஷ்டிர நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா மாநில கவர்னரின் பரிந்துரையை ஏற்று கவர்னர் ஆட்சி அமல்படுத்த குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கவர்னர் கோஷ்யாரி, தேசியவாத காங்கிரசுக்கு ஆட்சி அமைக்க கொடுத்த அவகாசம் முடிவடையாத நிலையில் மாநிலத்தில், ஜனாதிபதி ஆட்சியை எப்படி அமல்படுத்த முடியும் என்று கேள்விகள் எழுப்பப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், கவர்னருக்கு சிவசேனா தரப்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் ஆட்சி அமல்படுத்தப்பட்டால் அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர சிவசேனா முடிவு செய்தது.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் அகமது பட்டேல், கபில்சிபலுடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார்.