டில்லி,
ஜனாதிபதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் ஆளும் பாரதியஜனதா அரசும், காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சியினரும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அனைத்து கட்சிகளுடன் ஒருமித்த ஆதரவுடன் வேட்பாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று பாரதியஜனதா எண்ணுகிறது. இதற்காக, எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்த மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் வெங்கையா நாயுடு தலைமையில் குழு அமைக்கப் பட்டது.
இதன் காரணமாக எதிர்கட்சி தலைவர்களுடன், பாரதியஜனதா சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் பேசி வருகின்றனர். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியாவை இன்று காலை சந்தித்து பேசினர்.
ஏற்கனவேபிரதமர் மோடியின் முடிவுக்கு ஆதரவு அளிப்போம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் குறித்து பல மாநில முதல்வர்கள் மற்றும் கட்சி தலைவர்களுடன் வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்தினர்.
சுமார் 30 நிமிடம் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும், ஆனால் பாரதியஜனதா வேட்பாளர் யார் என்பது குறித்து பாரதியஜனதா குழுவினர் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.