டெல்லி: குடியரசு தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்பட நாடு முழுவதும் எம்.பி., எம்எல்ஏக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24-ம்தேதியுடன் முடிகிறது. இதைதொடர்ந்து குடியரசு தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெறு கிறது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளராகதிரௌபதி முர்மு, எதிர்க்கட்சிகள் தரப்பில் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்கா ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர். இன்று (ஜூலை 18) தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடாளுமன்றத்திலும் அனைத்து மாநில சட்டமன்ற செயலக வளாகத்திலும், நடைபெற்று வருகிறது. இன்று காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
வாக்குப்பதிவுக்காக எம்.பிக்களுக்கு பச்சை நிற வாக்குச் சீட்டும், எம்.எல்.ஏக்களுக்கு பிங்க் நிற வாக்குச் சீட்டும் வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உள்பட மத்தியஅமைச்சர்கள், எம்.பி.க்கள் தங்களது வாக்குககளை செலுத்தி வருகின்றனர். தமிழக சட்டமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
தமிழக எம்.பி.க்கள் செல்வராஜ், கணேசமூர்த்தி, கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தேர்தல் ஆணைய முன் அனுமதியை பெற்று. சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் வாக்களிக்கின்றனர். மற்ற தமிழக எம்.பி.க்கள் டெல்லியில் வாக்களிக்க உள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 4 மணி முதல் 5 மணி வரை வாக்களிக்கலாம் என்று வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவுக்கு பிறகு வாக்குப்பெட்டி சீலிடப்பட்டு, ஒரு மணி நேரத்திற்குள் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எடுத்து செல்லப்படும். வருகிற 21-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதைத்தொடர்ந்து, ஜூலை 25-ம் தேதி புதிய குடியரசுத் தலைவருக்கு இந்திய தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.