நியூஸ்பாண்ட்:

அ.தி.மு.க.வில் எடப்பாடி – ஓ.பி.எஸ். அணிகளைத் தொடர்ந்து சசிகலா – தினகரன் அணியும், குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாள் ராம்நாத் கோவிந்த்தை  ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அ.தி.மு.க., சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும் ஓ.பி.எஸ். தலைமையில் ஒரு அணியாகவும் பிரிந்தது.

சசிகலா ஆதரவில் அவரது அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பொறுப்பு ஏற்றார். ஆனால் நாளடைவில் எடப்பாடி மற்றும் அமைச்சர்களில் பெரும்பாலோர், சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்குவது போல பேசினர்.

இந்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களில் 34 பேர், தினகரன் பின் அணி திரண்டிருக்கிறார்கள். இவர்கள், தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருகிறார்கள். குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து எடப்பாடி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் இந்த எம்.எல்.ஏக்கல் கலந்துகொள்ளவில்லை.

ஆனாலும் குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். ஓ. பன்னீர் செல்வமும் ஆதரவு தெரிவித்தார்.

ஆனால், தினகரன் தலைமையில் இயங்கும் 34  எம்.எல்.ஏக்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில்,. சென்னை, அடையாறில் உள்ள தினகரன் வீட்டில், நேற்று முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன் மற்றும் நடிகர் கருணாஸ் உட்பட, தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன், தினகரன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில், ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க, சசிகலா முடிவு செய்துள்ளதாகவும், ஆகவே பாஜக வேட்பாளரை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்றும் தினகரன் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகரும் அ.தி.மு.க. முக்கிய பிரமுகருமான தம்பிதுரை டில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “எடப்பாடி பழனிச்சாமி அறிவித்ததுபோல அ.தி.மு.க. எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் பாஜக வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள். இந்த முடிவு சசிகலாவின் விருப்பத்துடனே அறிவிக்கப்பட்டது” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று தற்போது பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.  அ.தி.மு.க. துணப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியில் வந்திருக்கிறார்.

இருவரது கைது நடவடிக்கைக்கும் மத்திய பாஜக அரசுதான் காரணம் என்பதாக இவர்களது அணியை் சேர்ந்தவர்கள் பேசி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]