அமெரிக்க கல்வித் துறையை கலைக்கக் கோரும் நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை கையெழுத்திட்டார்.
டிரம்பின் இந்த நடவடிக்கை பழமைவாதிகளின் நீண்டகால இலக்காக இருந்து வந்த கல்வித்துறையை பிரிப்பதற்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதி என்று கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கல்வித் துறையை வீணானது மற்றும் தாராளவாத சித்தாந்தத்தால் மாசுபட்டது என்று கேலி செய்துள்ளார்.
இருப்பினும், 1979 இல் உருவாக்கப்பட்ட இந்தத் துறையை காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல் மூடுவது சாத்தியமற்றது என்று கூறப்படுகிறது. அதேவேளையில், இதனை நிறைவேற்ற அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்துவோம் என்று குடியரசுக் கட்சியினர் தெரிவித்தனர்.
இருப்பினும், இந்தத் துறை முழுமையாக மூடப்படாது. இந்தத் துறை சில முக்கியமான செயல்பாடுகளைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று வெள்ளை மாளிகை கூறியது.
குறைந்த வருமானம் கொண்ட பள்ளிகளுக்கான நிதி, பெல் மானியங்கள் மற்றும் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான பணத்திற்கான அதன் பொறுப்புகள் மற்றும் மாணவர்களுக்கான கல்விக் கடன் போன்ற முக்கிய பொறுப்புகளை தொடர்ந்து நிர்வகிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிக்க நடவடிக்கை காரணமாக ஆசிரியர் பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் டிரம்பின் இந்த அடுத்தகட்ட நடவடிக்கை அமெரிக்க கல்வித் துறையை பின்னுக்கு இட்டுச் செல்லும் என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
மேலும், அடைப்படையில் சமமற்ற அமெரிக்க கல்வி முறையில் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களை கல்வியில் பின்தங்க வைக்கும் என்றும் இதனால் டிரம்பிற்கு வாக்களித்த பெற்றோர் உட்பட லட்சக்கணக்கான அமெரிக்க மாணவர்களின் வாழ்வை சீரழிக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் போர் கொடி எழுப்பியுள்ளன.
அதேவேளையில், டிரம்பின் இந்த உத்தரவு கல்விக்கான தொலைநோக்குப் பார்வை கொண்டது என்று அவரது ஆதரவாளர்கள் இதை வரவேற்றுள்ளனர்.