டெல்லி: குடியரசு தலைவர்  திரவுபதி முர்மு, வரும் 18ந்தேதி சபரிமலை சென்று சுவாமி அய்யப்பனை தரிசிக்க உள்ளார். இதனால், இரண்டு நாள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவது  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வைகாசி மாத பிறப்பையொட்டி,  சபரிமலை அய்யப்பன்கோவில் நடை  வருகிற 14-ந்தேதி மாலை  திறக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, வரும்  19-ந்தேதி  வரை 5 நாட்கள் நடை திறந்திருக்கும், அன்று இரவு நடை அடைக்கப்படும். இந்த கால கட்டத்தில், பக்தர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து, தரிசனம் செய்து வருவார்கள்.

இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,  வருகிற 18 அல்லது 19-ந்தேதி முர்மு சபரிமலைக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.  அவரது சபரிமலை பயணம் குறித்த  உறுதியான தகவல்கள் வெளியாகாத நிலையில்,  குறிப்பிட்ட 2 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

சபரிமலை செல்வதற்காக,  கேரளா வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சபரிமலை அருகே  நிலக்கல் செல்கிறார். அங்கிருந்து கார் மூலமாக பம்பைக்கு செல்கிறார். பின்பு பம்பையில் இருந்து நடை பயணமாக சபரிமலை  அய்யப்பன் கோவிலுக்கு செல்வார் என கூறப்படுகிறது. இதையொட்டி, சபரி மலை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.  குடியரசு தலைவர் நடந்து வரும் பாதையின்  இரு புறமும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, மத்திய, மாநில அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் குடியரசு தலைவர் பயணம், அவரது சபரிமலை பயணம் மற்றும் தங்குமிடம் குறித்து, ஆய்வு செய்து, ஆலோசனை நடத்தினர்.

மேலும், சபரிமலையில்,  ஜனாதிபதி திரவுபதி முர்மு தங்குவதற்காக சன்னிதானத்தின் உள்ள தேவசம்போர்டு விருந்தினர் மாளிகையில் நவீன வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இரண்டு அறைகள் கட்டப்படுகின்றன.

பம்பை, மலைப்பாதை, சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் தூய்மை மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  அத்துடன்,  நிலக்கல்லில் இருந்து சாலக்காயம் வரையிலும், சாலக்காயத்தில் இருந்து பம்பை திரிவேணி வரையிலும் சாலை பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதனிடையே குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு சாமி தரிசனத்துக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட உள்ளன. வருகிற 18 மற்றும் 19-ந்தேதிகளில் சாமி தரிசனத்துக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.