சென்னை: நீதிக்கட்சி ஆட்சியின் தொடர்ச்சி தான் இப்போதைய திமுக ஆட்சி -கலைஞரின் தொடர்ச்சி நான் என்று ஆளுநர் உரைமீதான விவாதத்துக்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டமானது, ஜூன் 21-ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து விவாதம் தொடர்ந்து நடைபெற்றது. 3வது நாள் அமர்வான இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்து வருகிறார்.
அவரது உரையின் விவரம் வருமாறு:
என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து முதல்வர் பதவியில் அமர வைத்த மக்களுக்கு நன்றி
நீதிக் கட்சி ஆட்சியின் தொடர்ச்சி தான் இப்போதைய திமுக ஆட்சி, நீதிக் கட்சியின் தொடர்ச்சி அண்ணா, அண்ணாவின் தொடர்ச்சி கலைஞர், கலைஞரின் தொடர்ச்சி நான்.
அரசின் கொள்கைகள், திட்டங்கள் என அனைத்தையும் ஆளுநர் உரையில் சொல்லிவிட முடியாது. ஆளுநர் உரை ஒரு முன்னோட்டம் தான், அதாவது ட்ரெய்லர் மாதிரி. இது வெறும் ட்ரெய்லர் தான்.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம், அதில் ஒரு துளியும் சந்தேகம் வேண்டாம்.
திமுகவுக்கு ஏன் வாக்களிக்கவில்லை என மக்கள் வருந்தும் அளவுக்கு ஆட்சியின் செயல்பாடு இருக்கும்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்தமைக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம்.
முதலமைச்சராக இருந்த போது கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ள கூடாது என எடப்பாடி பழனிசாமியின் கைகளை யாரும் கட்டி வைக்கவில்லை. மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை என தெரிந்து எடப்பாடி பழனிசாமி அலட்சியமாக இருந்ததால் கொரோனா அதிகரித்தது. நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்பதை போல பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலான காலத்தை எடப்பாடி பழனிசாமி மறந்துவிட்டார். எடப்பாடி பழனிசாமி கூறியதை போல் இணைந்து செயல்பட்டு கொரோனாவை வெல்வோம்.
எடப்பாடி பழனிசாமி கூறியது போல் ஆளுநர் உரை யானையும் இல்லை மணி ஓசையும் இல்லை. அடக்கப்பட்ட யானைக்குத்தான் மணி கட்டுவார்கள், திமுக அடக்க முடியாத யானை.
அனைத்தும் இருந்தால் அதற்கு பெயர் டெலிபோன் டைரக்டரி, ஆளுநர் உரை இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.