இஸ்லாமாபாத்,
இந்தியா மீது நேரடி போருக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் கொக்கரித்துள்ளார்.
இந்தியாவின் காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லையோரம் உள்ள பகுதிகளில், பாகிஸ்தான் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும், அத்துமீறிய தாக்குதல்களையும் நடத்தி மறைமுகப்போரை திணித்து வருகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளையும் ஊடுருவ செய்து இந்திய நிலைகள் மீது தாக்குதல் தொடுத்து வருகிறது.
காஷ்மீர் எல்லையோரம் உள்ள உரி ராணுவ முகாமை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்கியதை தொடர்ந்து, இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் அதிரடி நடவடிக்கையில் செப்டம்பர் மாதம் 28–ந் தேதி ஈடுபட்டு, பயங்கரவாத முகாம்களை துவம்சம் செய்தது.
இதில் பயங்கரவாதிகளின் 7 முகாம்கள் அழிக்கப்பட்டதுடன், சுமார் 40 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்ட னர். அதைத் தொடர்ந்து எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
பாகிஸ்தான், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி தந்து வருகின்றனர். சமீபத்தில் நடத்திய பதிலடி தாக்குதலில், ஏழு பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களது இறுதி சடங்கில் கலந்துகொண்டு பேசிய பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் இந்தியா மீது நேரடி போருக்கு தயார் என்று கொக்கரித்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் பேசியதாவது,
உலகின் எந்த ஒரு ராணுவத்திற்கும் பாகிஸ்தான் ராணுவம் சளைத்ததல்ல. எந்த நாடாக இருந்தாலும் எதிர்கொள்ளும் திறன் பாகிஸ்தானுக்கு உள்ளது. தாய் நாட்டை காக்க எங்கள் வீரர்கள் தாக்குதலை துணிந்து சந்தித்து வருகின்றனர்.
மேலும், எல்லையருகே பணியாற்றும் வீரர்களின் வீரம் பாராட்டுக்குரியது. நேரடி போருக்கும் பாகிஸ்தான் ராணுவம் எந்த நேரமும் தயாராக உள்ளோம். அதிலும் வெற்றி பெறுவோம், என சவால்விட்டுள்ளார் பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப்.
பாகிஸ்தான் ராணுவ தளபதியின் இந்த ஆணவ பேச்சு இந்திய ராணுவத்தினரிடையே மேலும் கோபத்தை கிளறி விட்டுள்ளது.