சென்னை: திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக தமிழகஅரசு அறிவித்துள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள திரையரங்கு உரிமையாளர்கள், திரையரங்குகளை சுத்தப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்துள்ள திரையுலகம், தளர்வுகள் காரணமாக மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு (2019) அக்டோபர் மாதம் கொரோனா நெறிமுறைகளை கடைபிடித்து தியேட்டர்களை 50 சதவிகித பார்வையாளர்கள் மட்டும் அனுமதிக்கும் வகையில், அனுமதி வழங்கியது. இருந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் தியேட்டர்களுக்கு செல்லாத நிலையில், பல தியேட்டர்கள் இன்னும் திறக்கப்படாமலேயே இருந்து வருகிறது.
இந்த நிலையில், திரையுலகினர் வேண்டுகோளை ஏற்று, தியேட்டர்களிலும் 100 சதவிகித இருக்கைகளை உபயோகப்படுத்த தமிழகஅரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, தியேட்டர்கள், மால்களில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் போன்றவை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது. தமிழகஅரசின் அனுமதிக்கு வரவேற்பு தெரிவித்துள்ள திரையரங்கு உரிமையாளர்கள், தியேட்டர்களை சுத்தப்படுத்தி, சரி செய்யும்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வரும் பொங்கலுக்கு தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்கள் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகஅரசின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை ஜோதி தியேட்டரின் இணை உரிமையாளர் “முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம், எங்கள் வணிகத்தை புதுப்பிக்கிறோம், மக்கள் ஆதரவு கிடைக்கும் நம்புகிறோம் என்று தெரிவித்தவர், கொரோனா வைரஸை மனதில் வைத்து அனைத்து வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் பின்பற்றுவோம் என்றும் கூறினார்.
Patrikai.com official YouTube Channel