சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, சென்ட்ரல் சதுக்கம் கட்டுவதற்கான பூர்வாங்கப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
பூங்கா மற்றும் பாதுகாப்பு சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நிறைவடைந்ததும், சதுக்கம் கட்டும் பணிகள், 3 மாதங்களில் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
முக்கிய இடமாக திகழ்வதால், சென்ட்ரல் மெட்ரோ நிலையம் – விக்டோரியா ஹால் இடையே உள்ள இடத்தில், நவீன தொழில் நுட்பத்தில் தொலைநோக்குப் பார்வையுடன், மெட்ரோ ரயில் நிறுவனத்தால் ரூ.400 கோடி செலவில், 20 மாடிகளுடன் சென்ட்ரல் சதுக்கம் கட்டடப்படவுள்ளது.
பயணியர் விடுதிகள், ஷாப்பிங் மால், பொழுதுபோக்கு பூங்கா, ஓட்டல்கள் மற்றும் தரைக்கு அடியில் மூன்றடுக்கு வாகன நிறுத்தம் என சகல வசதிகளுடன் இந்த சதுக்கம் கட்டப்படவுள்ளது. மேலும், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் தெற்கு ரயில்வே அலுவலகங்களில் இருந்தும், இந்த சதுக்கத்துக்கு எளிதாக செல்ல ஏதுவாக, தரை வழியாகவும், சுரங்கம் வழியாகவும் இணைப்பு பாதைகள் கட்டப்பட உள்ளன.
கட்டுமான பூர்வாங்க பணிகள் கடந்த 2019ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இந்த சதுக்கம் கட்டப்படும் இடத்திற்கு அருகில், பாரம்பரிய கட்டடங்கள் தவிர, மற்ற கட்டடங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, சாலைகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.
தெற்கு ரயில்வே மற்றும் மெட்ரோ நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில், எம்டிசி பேருந்து நிறுத்தம் தேவையான அளவில் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. சதுக்கம் கட்டுவதற்கு அளவீடு செய்யப்பட்டுள்ள இடத்தைத் தவிர, மற்ற பகுதிகளில், சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.