புதுடெல்லி:
இந்தியா முழுவதும் கர்ப்பிணி பெண்களுக்கு மாதம்தோறும் இலவச மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்று மோடி அறிவித்தார்.
மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு மாதமும் வானொலியில் உரையாற்றும் மோடி இதுபற்றி அறிவித்து உள்ளார். இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகி 22 மாதங்கள் ஆகிறது. நேற்று 22வது நிகழ்ச்சியாக மோடி பேசியதாவது:
நமது நாட்டில் பிரசவத்தின்போது தாய்–சேய் மரண நிகழ்வு அதிகமாக இருப்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். இதை நாம் தீவிரமாக கவனத்தில் கொண்டு தடுத்திடவேண்டும். இதற்காக ‘தாய்மை பாதுகாப்பு சிறப்பு இயக்கம்’ ஒன்றை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது.
அதன்படி, அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் சுகாதார மையங்கள் ஆகியவற்றில் ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 9–ந்தேதி அன்று இலவசமாக மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். இதன் மூலம் ஆண்டுதோறும் 3 கோடி கர்ப்பிணிகள் பயன்அடைவார்கள்.
அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரியாத மகப்பேறு நிபுணர்களும் கூட மாதத்தில் ஒரு நாளை கர்ப்பிணி பெண்களின் உடல் நலத்துக்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டுகிறேன்.
எனது இந்த அழைப்புக்கு ஆயிரக்கணக்கான டாக்டர்கள் சாதகமான பதிலை தெரிவித்து இருக்கின்றனர். ஆனால், நமது நாடு மிகவும் பெரியது என்பதால் லட்சக்கணக்கான டாக்டர்களின் சேவை இதற்கு தேவைப்படுகிறது என்றார்.
மேலும் மாநில அரசுகளுக்கு வளர்ப்பு திட்டத்தின்கீழ் ரூ.40 ஆயிரம் கோடி கிடைக்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றம், ரியோ டிஜெனிரோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர், வீராங்கனைகளின் பங்கேற்பதற்கு வாழ்த்து, வர இருக்கும் இந்திர சுதந்திர தின விழா கொண்டாட்டம், தனது ஆப்பிரிக்க பயணம் பற்றி, இந்தியாவில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளாக ரூ.10 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டது பற்றியும் பேசினார்.
மொத்தம் 35 நிமிடங்கள் பிரதமர் மோடி வானொலி மூலம் உரையாற்றினார்.