கடலூர்: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ள நிலையில், தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்தம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இருக்கிறது. வங்க கடலில் உருவாகியுள்ள இந்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தற்போது நிவர் என்ற புயலாக உருவாகியுள்ளது.
புயல் காரணமாக கடலூர், விழுப்புரம், தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாகவும், புயல் தாக்கினால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள், பல்வேறு துறை சார்ந்த உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். அதே நேரத்தில் புயலால் பாதிக்கப்படக்கூடும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ள மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்து. அமைச்சர் எம்.சி.சம்பத், சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனிடையே, வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ள நிலையில் நிலைமையை தீவிரமாகக் கண்காணிக்க தமிழகம், புதுச்சேரி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக இரு அரசுகளுக்கும் கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டது.