பாட்னா
பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை அவருக்கு மிகவும் நெருக்கமான உதவியாளராக இருந்த பிரசாந்த் கிஷோர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சி குறைந்த அளவிலான தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆயினும் நிதிஷ்குமாருக்கு முதல்வர் பதவி அளிக்கப்பட்டது. நேற்று அவர் பதவி ஏற்றார். கூட்டணியில் அதிக இடங்களை பெற்றுள்ள பாஜக முக்கியத்துவம் வகிப்பதாகக் கூறப்படுகிறது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரும் தேர்தல் உத்தியாளருமான பிரசாந்த் கிஷோர் ஒரு காலத்தில் நிதிஷ்குமாருக்கு மிக நெருக்கமான உதவியாளராக இருந்தார். அதன் பிறகு அவர் கட்சிக்கு எதிரான கருத்துக்களைப் பகிரங்கமாகத் தெரிவித்தார். அவரது இந்த சுதந்திர போக்கால் நிதிஷ்குமார் அவரை கட்சியை விட்டு நீக்கினார்.
தற்போது பிரசாந்த் கிஷோர் பல எதிர்க்கட்சிகளுக்குத் தேர்தல் உத்திகளை அளித்து வருகிறார். கடந்த 4 மாதங்களாக அவர் தேர்தல் பணிகள் காரணமாக சமூக வலைத் தளங்களில் எவ்வித பதிவும் இடாமல் இருந்தார். நேற்று நிதிஷ்குமார் பீகார் முதல்வராகப் பதவி ஏற்றதை தொடர்ந்து அவர் மீண்டும் டிவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
பிரசாந்த் கிஷோர் தனது டிவிட்டரில், “பாஜகவால் நியமனம் செய்யப்பட்ட முதல்வராகப் பதவி ஏற்ற நிதிஷ்குமாருக்கு வாழ்த்துக்கள். களைப்படைந்த மற்றும் அரசியல் ரீதியாகச் சிறுமையாகி உள்ள தலைவரை முதல்வராகப் பெற்ற பீகார் மாநிலம் இன்னும் சில வருடங்களுக்கு மந்தமான நிர்வாகத்தை சந்திக்க நேரிட்டுள்ளது.” எனப் பதிந்துள்ளார்.