டெல்லி: பிரஷாந்த் கிஷோரின் யோசனைகளை பின்பற்றியதாலேயே டெல்லியில் அர்விந்த் தலைமையிலான ஆம் ஆத்மி மீண்டும் அரியணை ஏறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தலைநகர் டெல்லியில் கருத்துக் கணிப்புகள் சொன்னது போல பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைத்து இருக்கிறது. முதலமைச்சராக மீண்டும் பதவியேற்க உள்ள அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
பல்வேறு மாநில முதலமைச்சர்களும், கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். இந் நிலையில் எப்படி அதிக தொகுதிகளை வென்று, மீண்டும் ஆட்சி கட்டிலில் ஏறி அமர்ந்தார் அர்விந்த் கெஜ்ரிவால் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
அக்கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளாராக செயல்பட்டவர் பிரஷாந்த் கிஷோர். அவரது ஆலோசனைகள், வழிகாட்டுதல்களை கையாண்டு தான் அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.
அதாவது கெஜ்ரிவாலுக்கு அவர் சில முக்கிய யோசனைகளை கூறி இருக்கிறார். தனிநபர் அரசியலில் ஈடுபடக் கூடாது, மத அரசியல், எதிர்க்கட்சிகளை தாக்கி பேசக்கூடாது, குறிப்பாக பாஜக பற்றியோ, பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டியோ பேசக்கூடாது என்று பல முக்கிய யோசனைகளை கூறி இருக்கிறார்.
அதன்படி, அர்விந்த் கெஜ்ரிவால் செயல்பட்டுள்ளார். பாஜக, பிரதமர் மோடி யார் மீதும் குற்றச்சாட்டவில்லை. முழுக்க, முழுக்க மக்களுக்கு ஆம் ஆத்மி ஆட்சியில் என்ன செய்தது என்பதையே பிரச்சார ஆயுதமாக பயன்படுத்தி இருக்கிறார்.
வெறுப்பு அரசியலை கைவிட்டு, மாநிலத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும் பிரதிநிதியாக மக்களிடம் அடையாளப்படுத்த வேண்டும் என்று பிரஷாந்த் கிஷோர் கூறி உள்ளார்.
அதன்படி அரசின் செயல்பாடுகள் அடங்கிய ரிப்போர்ட் கார்டுகளை தயார் செய்து ஒவ்வொரு தொகுதியிலும் 25,000 வீடுகளுக்கு வினியோகித்து இருக்கிறார். தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் 15,000 வாக்காளர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு அரசின் வெற்றிகள் குறித்த பதிவை கொண்டு போய் சேர்த்திருக்கிறார்.
அதேபோல தேர்தல் சமயத்தில் தாம் அளித்த வாக்குறுதிகளில் நிறைவேற்றிய திட்டங்களை, சலுகைகளை குறிப்பாக சிசிடிவி கேமிராக்கள், இலவச பேருந்து சலுகை என பலவற்றை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து, இது மாநிலத்துக்கான, மக்களுக்கான முன்னேற்றம் தரும் அரசு என்று பிரகடனப்படுத்தி இருக்கிறார்.
இது போன்று பிரஷாந்த் கிஷோர் தெரிவித்த பல யோசனைகளை பின்பற்றியதால் வெற்றி வசமாகி இருக்கிறது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.