குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கர்நாடக மாநில காங்கிரஸ் சார்பில் பெங்களூருவில் புகழாஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

குடியரசு தலைவர் பதவிக்காலம் முடிந்த பின்னர், பிரணாப் முகர்ஜி, நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்துக்கு சென்று, அங்கு நடந்த விழாவில் பேசியது தொடர்பாக இந்த இரங்கல் கூட்டத்தில் சில கருத்துகள் பரிமாறப்பட்டன.

முன்னாள் மத்திய அமைச்சர் மல்லிகார்ஜுன் கார்கே இந்த விவகாரத்தை தொடங்கி வைத்தார்.
’’ எனக்கு ஒரு வருத்தம் உண்டு. அதனை சொல்வதற்கு இது பொருத்தமான இடமும் நேரமும் இல்லை. என்றாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை’’ என பெரும் பீடிகையோடு அஞ்சலி உரையை ஆரம்பித்த மல்லிகார்ஜுன் கார்கே ’’ அனைத்து துறைகளிலும் வித்தகராக திகழ்ந்த பிரணாப் முகர்ஜி, தனது கடைசி நாளில் ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்துக்கு ஏன் போனார் என்பது எனக்கு புரியவில்லை’’ என்று சொல்லி விட்டு, அமர்ந்தார்.

அடுத்து பேசிய கர்நாடக முன்னாள் முதல்-அமைச்சர் சித்தராமய்யா கொஞ்சம் கூடுதலாகவே இந்த விஷயத்தை கிண்டினார். ‘’கார்கே சொன்னது போல், பிரணாப்’முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு சென்றது எனக்கும் மர்மமாகவே உள்ளது.

மகாத்மா காந்தியை கொன்ற அமைப்பின் அலுவலகத்துக்கு பிரணாப் முகர்ஜி ஒரு போதும் சென்றி ருக்கக்கூடாது. அங்கு போய் உரை நிகழ்த்தி இருக்கவேண்டாம். இது குறித்து அவர் கடைசி வரை விளக்கமும் கொடுக்க வில்லை’’ என அஞ்சலி செலுத்தி விட்டு அமர்ந்தார், சித்தராமய்யா.

பிரணாப் முகர்ஜியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில்,அவரை மூத்த காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

-பா.பாரதி.